×

சிக்கிமை புரட்டி போட்ட மேகவெடிப்பு; வெள்ளப்பெருக்கு 22 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் மாயம்: 8 பேரின் சடலங்கள் மீட்பு

காங்டாக்: சிக்கிமில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 22 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். சிக்கிம் மாநிலத்தில் லோநாக் ஏரி பகுதியில் நேற்று அதிகாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கனமழை கொட்டத் தொடங்கியது. சில மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக லாசென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சுங்தாங் அணையில் நீர்வரத்து உயர்ந்தது. இதனால் உடனடியாக அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. நீர்மட்டம் திடீரென 15-20அடி உயரத்துக்கு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர குடியிருப்புக்கள் வெள்ளத்தில் சிக்கின.

இந்நிலையில் சிங்டாம் அருகே பார்டங் பகுதியில் இருந்த ராணுவ முகாமிற்குள் வெள்ளம் புகுந்தது. வீரர்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்டனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 41 ராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு நாசமானது. முகாமில் இருந்தவர்களில் 22 வீரர்கள் மாயமாகி உள்ளனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு ராணுவ வீரர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 166 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கோலிடார் பகுதியில் இருந்து 5 பேரின் சடலங்களும், வடக்கு வங்கம் பகுதியில் இருந்து 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. காங்டாக்கில இருந்து சிங்டாம் வரை உள்ள சுமார் 30கி.மீ. நீளமுள்ள இந்ரேனி பாலம் முழுவதும் டீஸ்டா ஆற்று வெள்ளத்தால் சேதமானது. டிக்சு, ராங்போ உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சிக்கிமை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-10 மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. மழை, வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆங்காங்கே நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், வீடுகளை இழந்தவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து உயரதிகாரி கூறுகையில், ”22 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 47 பேரும் வெள்ளத்தில் காணாமல்போயுள்ளனர். 166 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்” என்றார். ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ”தகவல் தொடர்பு இல்லாததால் வெள்ளத்தில் சிக்கி மாயமான 23 ராணுவ வீரர்கள் யார், யார் என விவரங்கள் தெரியவில்லை” என்றார். மங்கன், காங்டாக், பாக்யாங் மற்றும் நாம்சி மாவட்டங்களில் வருகிற 8ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட சிங்டாம் பகுதியை முதல்வர் பிஎஸ் தமாங் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படியும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

* உதவ தயார்: பிரதமர்
திடீர் மழை வெள்ளத்தால் சிக்கிம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங்கை பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டார். அப்போது வெள்ள பாதிப்பு குறித்து விசாரித்த பிரதமர், வெள்ள பாதிப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார்.

The post சிக்கிமை புரட்டி போட்ட மேகவெடிப்பு; வெள்ளப்பெருக்கு 22 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் மாயம்: 8 பேரின் சடலங்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : cloudburst ,Sikkim ,Gangtok ,Dinakaran ,
× RELATED அருணாச்சலில் ஜூன் 2 காலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை