×

அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது: மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் 5 அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சமூகக் குற்றம், இந்த அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, எந்தவகையான வன்முறையையும் சகித்துக் கொள்ளாது. இதன்மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு இருக்கின்றன என்பதை நீங்கள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.

இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அரசின் முன்னோடி திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். தகுதியுள்ள சுமார் ஒரு கோடியே ஆறு லட்சம் மகளிர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரத்தை வரவு வைத்தது அதைவிட மிகப் பெரிய சாதனையாகும். இத்திட்டம் குறிப்பிட்ட நாளில் வெற்றிகரமாக துவங்கிட சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாவட்ட ஆட்சியர்களாகிய உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

அதே நேரத்தில், இத்திட்டத்தில் விடுபட்டவர்கள் தற்போது விண்ணப்பம் அளித்து வருகிறார்கள். அவற்றையெல்லாம் முறையாக, விரைவாகப் பெற்று, ஆய்வு செய்து, அவற்றின்மீது விதிகளின்படி தீர்வு காண வேண்டும். மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். மிகச் சிறப்பாக நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில் உங்களது தனிப்பட்ட பங்களிப்பைப் பாராட்ட விரும்புகிறேன். இத்திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட நீங்கள் இதில் தொடர்ந்து தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

முன்னர் குறிப்பிட்ட திட்டங்களை மட்டுமல்ல, இந்த அரசின் மற்ற திட்டங்களின் பலன்கள் உரியவர்களை முழுமையாகச் சென்றடைய வேண்டுமானால், மாநில நிர்வாகம் மட்டுமல்ல, மாவட்டநிர்வாகமும் தொய்வில்லாமல் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும். ஏழை, எளிய மக்களிடம் நேரடி தொடர்பில் நீங்கள் இருக்க வேண்டும். திட்ட ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது மட்டுமல்லாமல், அதன் பலன் எந்தளவு மக்களைச் சென்றடைந்துள்ளது. அதில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன என்பதை எல்லாம் நீங்கள் நேரடியாக அறிந்து, அவற்றை நீக்கிட வேண்டும்.

பல மாவட்டங்களில் நிலம் தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக, நிலத்தை அளந்து காட்டுதல், பொது நிலத்தைப் பயன்படுத்துதல், கோயில் நிலங்கள் போன்ற பல விஷயங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்ந்து காணப்படுகின்றன. சில சமயங்களில் அவை சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாகவும் மாறி விடுகிறது. எனவே, நில அளவைத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மாதந்தோறும் நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கென மட்டுமே ஆய்வுக் கூட்டம் நடத்திட வேண்டும். அடிக்கடி அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்யுங்கள், அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகளின் தரம் குறித்து கேட்டு அறியுங்கள்.

அதேபோல், மருத்துவர்களுக்கும் சில தேவைகள் இருக்கலாம். அவற்றையும் அறிந்து தீர்வு காணுங்கள், கல்வியும், மருத்துவமும் இந்த அரசின் இரு முக்கியமான முன்னுரிமைப் பிரிவுகள் என்பதை உணர்ந்து பணியாற்றுங்கள். மகளிருக்கான விடியல் பயணத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் தரம், மருத்துவ சேவைகளின் தரம், சாலைக் கட்டமைப்பு வசதிகளில், கழிவுநீர் கட்டமைப்புகளில் அரசிடமிருந்து பெற வேண்டிய அனுமதிகள், சான்றுகள் என்று குறிப்பிட்ட சில சேவைகளில் மக்களுடைய எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, இது ஒரு சமூகக் குற்றம், இந்த அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, எந்தவகையான வன்முறையையும் சகித்துக் கொள்ளாது – கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இவ்வகைக் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கிறார்கள். இதன்மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு இருக்கின்றன என்பதை நீங்கள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென ஒரு ஆய்வு நடைமுறையை உள்துறைச் செயலாளர் வடிவமைத்து, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல் துறைத் தலைவருக்கும் வழங்கி, அடுத்த மாதம் முதலே செயல்படுத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசின் பல்வேறு திட்டங்கள் எல்லா மாவட்டங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும், சில மாவட்டங்களுக்கு, அம்மாவட்டங்களுக்குரிய சமூக, பொருளாதார சூழ்நிலைகளின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய சில பிரச்சனைகளும் இருக்கத் தான் செய்யும். அத்தகைய பிரச்சனைகளை, அதற்கான தீர்வுகளை விவாதிக்கின்ற களமாக இம்மாநாடு உங்களுக்கு அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள நீங்கள், மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும். வழக்கமான நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, காலதாமதத்தைத் தவிர்க்கும் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு சில மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர்களை பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் தவிர, மற்ற நாட்களில் சந்திக்க இயலாத நிலை உள்ளது என்று அறிகிறேன். இது சரியல்ல, தலைமையகத்தில் நீங்கள் இருக்கும் நாட்களில் பொது மக்களைச் சந்திப்பதற்கு பார்வையாளர்கள் நேரம் என ஒதுக்கி, அவர்களைக் கட்டாயம் சந்திக்க வேண்டும். சாலை விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போது நீங்களே களத்திற்குச் செல்ல வேண்டும். மக்களை மீட்டு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு, அரசின் முகமாக மக்களுக்கு உதவும் கரமாக நீங்கள் செயல்பட வேண்டும்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடங்குவதற்கு முன்னதாக உங்களது பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டும்.

அரசு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவையனைத்தையும், எவ்வளவு விரைவாகவும், சிறப்பாகவும் நடத்தி கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு பேரும், மரியாதையும் கிடைக்கும். திட்டங்களின் சுணக்கமும் தவறு ஏற்படுமானால், அதன் மீதான விமர்சனம் எங்கள் மீதுதான் வரும். தேர்தல் என்பதால், மிக அதிகமாகவே வரும். உங்கள் கவனத்திற்கு வரும் புகாரை உடனடியாக களையுங்கள். அதை செய்தாலே விமர்சனங்கள் வராது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

இந்த 2 நாட்களாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் தெரிவித்த ஆலோசனைகளும், கருத்துக்களும் அரசின் கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்துக்கொண்டு, நிறைவாக, இந்தக் கூட்டத்தில் சில அறிவிப்புகளை தற்போது வெளியிட விரும்புகிறேன். முதலாவதாக, அரசுப் பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தற்போது மாணவர் ஒருவருக்கு மாதந்தோறும் உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.1,400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல், அரசுக் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயிலுவோருக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.1,100 என்பது இனி ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 1,71,844 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.68 கோடியே 77 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும். இதனை கல்விக்காக செய்யும் ஒரு முதலீடு என்று கருதியே இந்த அரசு இதனை மேற்கொள்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டாவதாக, காவல் துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின்படி, கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு, மறுவாழ்வு பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.30 ஆயிரத்திலிருந்து, ரூ.50 ஆயிரமாக வழங்கப்படும்.

மூன்றாவதாக, விசாரணைக் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், அதனைக் களைய உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று வீடியோ-கான்பரன்சிங் முறையினைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நான்காவதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளை பழுதுநீக்கம் செய்து சீரமைக்க சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும்.

ஐந்தாவதாக, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த தேவையான அனுமதிகளை வழங்க தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு வழிகாட்டுக் குழு அமைக்கப்படும். இந்த அறிவிப்புகளோடு, சிறப்பாகப் பணியாற்றிவரும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும், மாவட்ட வன அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

* அரசுப் பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் தொகை ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து நானூறு ரூபாயாக உயத்தப்படும்.
* அரசுக் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயிலுவோருக்கு மாதம் ரூ.1100 வழங்கப்படுகிறது. இனி ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.
* கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு, மறுவாழ்வு பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.30 ஆயிரத்திலிருந்து, ரூ.50 ஆயிரமாக வழங்கப்படும்.
* விசாரணைக் கைதிகளுக்கு வீடியோ-கான்பரன்சிங் முறை விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை பழுதுநீக்கம் செய்து சீரமைக்க சிறப்புத் திட்டம் வகுக்கப்படும.
* பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இணைப்புச் சாலை அமைக்க வழிகாட்டுக் குழு அமைக்கப்படும்.

The post அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது: மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் 5 அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : CM ,M.K.Stal ,Chennai ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை வீசும் என வானிலை எச்சரிக்கை...