×
Saravana Stores

உழைக்கும் மக்களை இழிவுப்படுத்துவதுதான் சனாதனம்!: 200 பேருக்கு பூணூல் அணிவித்த ஆளுநருக்கு திருமாவளவன் கடும் கண்டனம்..!!

கடலூர்: நந்தனார் பிறந்த ஊரில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த 200 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் பூணூல் அணிவிக்கப்பட்டிருக்கிறது. ஆளுநரின் நடவடிக்கைக்கு கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள். 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பிறந்த ஊரான காட்டுமன்னார்கோவில் அருகே ஆதனூரில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நந்தனார் குருபூஜை விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. பட்டியலின மக்களுக்கு பூணூல் அணிவித்த ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மேன்மைப்படுத்துகிறோம் எனும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவு படுத்துவது தான் சனாதனம் என கூறி இருக்கிறார். இதன் மூலமாக பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? என கேள்வி எழுப்பி இருக்கும் அவர், பூணூல் அணிவிக்கப்பட்ட பட்டியலின மக்களை கோயில் பூசாரி ஆக்குவாரா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அத்துடன், ஆளுநர் அவர்கள் நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம். நாடாண்ட மன்னன் நந்தனை மாடுதின்னும் புலையன் என இழிவுப்படுத்தும் பெரிய புராணக் கட்டுக்கதைகளைப் புறந்தள்ளுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக ஆதனூர் கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில், நந்தனார் குருபூஜை விழாவில் பங்கேற்க வந்த ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சனாதனத்தை உயர்த்தி பிடித்து பேசி வரும் ஆளுநரை கண்டிக்கும் விதமாக இந்த போராட்டம் நடைபெற்றதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

The post உழைக்கும் மக்களை இழிவுப்படுத்துவதுதான் சனாதனம்!: 200 பேருக்கு பூணூல் அணிவித்த ஆளுநருக்கு திருமாவளவன் கடும் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : SANADANAM ,GOVERNOR ,KADALUR ,R. N. Ravi ,Punul ,Sanadana ,Thrima Valawan ,
× RELATED புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் 8 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு