×

மீஞ்சூர் பேரூராட்சியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீர்: கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில் குடியிருப்பு வீடுகளின் முன்பு திறந்தவெளியில் நீண்ட காலமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல் மற்றும் நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. இங்கு கழிவுநீரை வெளியேற்ற கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டான அரியன்வாயல் பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள அபுல்கலாம் ஆசாத் 1,2,3 தெருக்கள், கணேஷ் நகர், ஜெயலட்சுமி நகர், இளங்கோ நகர், சண்முகபுரம், ஜெகன் நகர், திருப்பதி நகர், தங்கவேல்புரம் என 10க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் முறையான கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் அங்கு தனியார் நிலங்களில் நீண்ட காலமாக தேங்கி நிற்கும் கழிவுநீர், அங்குள்ள குடியிருப்பு வீடுகளின் முன்பு வழிந்தோடி, திறந்தவெளியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல் மற்றும் நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் மாவட்ட கலெக்டருக்கு 2வது வார்டு உறுப்பினர் அபுபக்கர் பல்வேறு மனுக்கள் அனுப்பியுள்ளார். எனவே, அரியன்வாயலில் உள்ள நகர் பகுதிகளில் முறையாக கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்கள் உடனடியாக அமைத்து, அங்கு நோய்தொற்றுகள் பரவுவதை தடுக்க பேரூராட்சி தலைவர் மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post மீஞ்சூர் பேரூராட்சியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீர்: கால்வாய் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Menghur Province ,BONNERI ,MEENJUR ,Meanjur Baruratchi ,Dinkaran ,
× RELATED 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 7 செ.மீ. மழை பதிவு!