×

மோடி, அமித்ஷா அழுத்தம் தரவில்லை!: 2 கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க பாஜகவுடன் கூட்டணி முறிவு.. எடப்பாடி பழனிசாமி பேட்டி..!!

சேலம்: 2 கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க பாஜகவுடன் கூட்டணி முறிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் புதிய நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

கூட்டணி முறிவில் உறுதியாக உள்ளோம்:

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. உறுதியாக இருக்கிறோம். அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்ற கேள்விக்கு ‘நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். கூட்டணி தொடர வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியது அவரது சொந்த கருத்து; இதுகுறித்து அவரிடமே கேட்க வேண்டும் என்று கூறினார்.

40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்:

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அமைக்கும் கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வி அடைந்துள்ளது என்றார்.

நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது ஏன்?:

நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தது தொகுதி நலனுக்காகவே என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக அமைச்சர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்தால் கூட்டணி என அர்த்தமா? என கேள்வி எழுப்பினார். நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். தென்னை விவசாயிகளின் பாதிப்பு குறித்து கோரிக்கை வைக்கவே நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர் என்று செய்தியாளர்களிடம் கூறினார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமையை செய்வதற்காகவே நிர்மலா சீதாராமனுடன் சந்தித்தனர். பாஜக-அதிமுக கூட்டணி முறிவு நாடகம் அல்ல; இந்தியா கூட்டணிதான் நாடகம் என எடப்பாடி விமர்சனம் செய்தார்.

கர்நாடகா நீர் திறந்துவிட மறுக்கிறது:

முதல்வர் ஸ்டாலின் சோனியா காந்தியிடம் பேசி கர்நாடக அரசிடம் இருந்து நீரைப் பெற்றிருக்கவேண்டும். கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் போதுமான அளவு நீர் இருந்தும் கர்நாடகா நீர்திறக்க மறுக்கிறது என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

அண்ணாமலையை மாற்றக் கோரவில்லை:

அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க பாஜக நெருக்கடி தந்ததாக கூறுவது தவறு. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என பாஜக தலைமை எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இத்தனை தொகுதிகள் வேண்டும் என பாஜக தேசிய தலைமை எந்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை. அமித்ஷாவோ, நட்டாவோ, மோடியோ அதிமுகவுக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள் மனதை காயப்படுத்திவிட்டது:

பாஜகவினர் அதிமுகவுடன் சீட்டு ஒதுக்கீடு சம்பந்தமாகவும் எதுவும் பேசவில்லை. தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் அதிமுக தொண்டர்கள் மனதை காயப்படுத்திவிட்டது. தொண்டர்கள் உழைத்தால்தான் கட்சி வெற்றி பெற முடியும். தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

The post மோடி, அமித்ஷா அழுத்தம் தரவில்லை!: 2 கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க பாஜகவுடன் கூட்டணி முறிவு.. எடப்பாடி பழனிசாமி பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Amitsha ,Bajaw ,Edapadi Panisami ,Salem ,Edabadi Pannisamy ,Salem District ,Etapadi ,Dappadi Pannisami ,
× RELATED வாரணாசியில் மோடியின் தேர்தல் அலுவலகத்தை திறந்தார் அமித்ஷா