×

சமூகநீதிக்கு எதிரான தடைகளை உடைத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: சமூகநீதிக்கு எதிரான தடைகளை உடைத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில் கூறியதாவது, பிகார் அரசைத் தொடர்ந்து ஒதிஷா மாநில அரசும், கர்நாடக அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றன. ஒதிஷாவில் மே 1 முதல் ஜூலை 10 வரை நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அம்மாநில அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதை விரைவில் வெளியிட இருப்பதாக ஒதிஷா அரசு அறிவித்துள்ளது. அதேபோல், 2018ம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையிலான புதிய அறிக்கையை கர்நாடக அரசிடம் நீதியரசர் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அடுத்த மாதத்திற்குள்ளாக தாக்கல் செய்யும்; அதன்பின் அதன் விவரங்களும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சமூகநீதியைக் காப்பதற்கான ஒதிஷா மற்றும் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. சமூகநீதியின் தொட்டில் தமிழ்நாடு தான் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

சமூகநீதி வழங்குவதற்கான பல முன்முயற்சிகள் தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கியுள்ளன. அதேபோல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல் என்ற சமூகநீதித் தென்றலும் தென் எல்லையான தமிழகத்திலிருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்படி கடந்த 44 ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் போதிலும், அதை செய்ய சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் அரசுகள் முன்வரவில்லை.

பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை ஒட்டுமொத்த இந்தியாவும் வரவேற்கும் நிலையில், அதிகாரப்பூர்வமாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.சமூகநீதி சார்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பழைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால் அதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10% இட ஒடுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் ஆகும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான ஒன்றல்ல. தமிழக அரசுக்கு இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஒரு மாதத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய தடையாக இருப்பது எது என்பது தெரியவில்லை. சமூகநீதிக்கு எதிரான தடைகள் எவையாக இருந்தாலும் அவற்றை உடைத்து தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்கான ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பிறப்பிப்பார் என்று நம்புகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post சமூகநீதிக்கு எதிரான தடைகளை உடைத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Satiwari ,Ramadas ,Chennai ,Bhamaka ,Sathiwari ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண்...