×

சிக்கிம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்..!!

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தீஸ்தா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நதியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கரையோரம் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு சிக்கிம் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து காட்டாற்று வெள்ளம் உருவானது. வெள்ளப்பெருக்கால் NH-10 தேசிய நெடுஞ்சாலை நீரில் மூழ்கியது.

சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் திடீரென 15-20 அடி உயரத்திற்கு கீழ்நோக்கி அதிகரித்தது. லச்சேன் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ முகாமை வெள்ளம் தாக்கியதால் அங்கிருந்த 23 ராணுவ வீரர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சில வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முதல், தெற்கு சிக்கிமில் உள்ள நம்ச்சி மற்றும் நாம்தாங் ஆகிய இடங்களில் முறையே 98.0மிமீ மற்றும் 90.5மிமீ மழை பெய்துள்ளது. மேலும் 3 – 4 நாட்களுக்கு இந்த பகுதியில் மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

The post சிக்கிம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Sikkim ,Gangtok ,Army ,India ,
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு