×

காஞ்சிபுரத்தில் தண்டவாளத்தை விட்டு விலகி சாலைக்கு வந்தது சரக்கு ரயில்: இருசக்கர வாகனங்களை மோதி தள்ளியது

சென்னை: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு சாலைக்கு வந்ததால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் இருந்து மோட்டார்களுக்கு பயன்படுத்தும் ரோல் காயில் ஏற்றிக்கொண்டு 60 பெட்டிகளுடன் சரக்கு ரயில் ஒன்று வந்தது. இந்த ரயில் நேற்று மாலை 6 மணியளவில் 2வது பிளாட்பார்ம் ரயில் பாதை வழியாக காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்திற்கு வந்தது. அதேசமயம், எதிர் மார்க்கத்தில் முதல் பிளாட்பாரம் ரயில் பாதை வழியாக சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் நின்று சரக்குகளை இறக்க வேண்டிய ரயில் சிக்னல் கோளாறால் நிற்காமல் தண்டவாளம் முடிந்த பகுதியை கடந்து தடுப்புகளை உடைத்துக்கொண்டு சுமார் 20 மீ தொலைவுக்கு வந்து சாலை பகுதியில் சுமார் 5 மீட்டர் தூர் வந்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலர்கள் ரயில் சக்கரத்தில் சிக்கி சேதமடைந்தன. அந்த ரயில் பாதை பயன்படுத்தாத பகுதி என்பதால் அருகில் வளர்ந்திருந்த ஒரு மரத்தின் மீது மோதி நின்றது. அதே நேரத்தில் அப்பகுதியில் தண்டவாளத்தின் அருகே அமர்ந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சரக்கு ரயில் விபத்து தொடர்பாக, சிக்னல் கோளாறு காரணமா என்பது குறித்து ரயில்வே போலீசார், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்புப் பணிகள் 4 மணி நேரம் நடைபெறும் என்பதால், ரயில்வே கேட் மூடப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரத்தில் தண்டவாளத்தை விட்டு விலகி சாலைக்கு வந்தது சரக்கு ரயில்: இருசக்கர வாகனங்களை மோதி தள்ளியது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,CHENNAI ,Kanchipuram Old Railway Station ,Cargo ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...