×

வாணியம்பாடி அருகே சாலை வசதியில்லாததால் கர்ப்பிணியை டோலி கட்டி 7 கி.மீ. தூக்கி சென்ற மக்கள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 7 கி.மீ. தூரம் டோலி கட்டி பொதுமக்கள் தூக்கி சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலையை சேர்ந்தவர் ராஜாகிளி(32), விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி(22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த மலை கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததால் கையில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டும், டார்ச் லைட் பிடித்தும் டோலி கட்டி கர்ப்பிணியை அமர வைத்து மலையிலிருந்து கீழே உள்ள தார்சாலை வரை தூக்கி வந்தனர். பின்னர், அங்கிருந்து அருகே உள்ள வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேஸ்வரிக்கு நேற்று காலை சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. சாலை வசதி இல்லாத மலைப்பகுதியில் இருந்து கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி வரப்பட்ட காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘நெக்னாமலை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்கியும் இன்று வரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 7 கி.மீட்டர் தூரத்திற்கு மலை கிராம மக்கள் ஒன்றிணைந்து தற்காலிக மண் சாலை அமைத்தோம். சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் தற்போது இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே தற்போது கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்றோம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினரும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி செய்து தர வேண்டும்’ என்றனர்.

The post வாணியம்பாடி அருகே சாலை வசதியில்லாததால் கர்ப்பிணியை டோலி கட்டி 7 கி.மீ. தூக்கி சென்ற மக்கள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Vaniyampadi ,Nekhnamalai village ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...