×

எடப்பாடியுடன் எஸ்.பி.வேலுமணி 2 மணி நேரம் ரகசிய ஆலோசனை: மாஜி அமைச்சர் உதயகுமாரை வெளியேற்றிவிட்டு பேசியதால் ரோட்டில் காத்திருந்தார்

சேலம்: அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன், எடப்பாடி பழனிசாமி சேலம் வீட்டில் 2 மணி நேரம் நடத்திய ரகசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது வீட்டில் மாஜி அமைச்சர் உதயகுமார் நேற்று நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார். அதே நேரத்தில் மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சேலம் வந்தார். இருவரும் மூத்த நிர்வாகிகள் என்றபோதிலும் உதயகுமாரை வெளியே அனுப்பிவிட்டு, வேலுமணியுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக எடப்பாடி பேசினார். வேலுமணியை சந்தித்து பேசுவதற்காக உதயகுமார், எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் அருகில் உள்ள ரோட்டில் 2 மணி நேரம் காத்துக்கிடந்தார்.

அதே நேரத்தில் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் நேரத்தில் கொங்கு மண்டல அதிமுக எம்எல்ஏக்கள், கோவை வந்த பாஜவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசினர். ஆடு பகை குட்டி உறவு என்பது போல கூட்டணியில் இருந்து வெளியே வந்த நிலையில் நடந்த இந்த சந்திப்பு மீண்டும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜ மேலிடத்தில் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், அவர் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என அனைவரும் கூறிவந்த நிலையில் தன்னிலை விளக்கமாக, நான் என்றும் அதிமுககாரன் என்று எஸ்.பி.வேலுமணி சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் அதிமுக எல்எல்ஏக்களை நிர்மலா சீதாராமனுடன் சந்திக்க வைத்து விட்டு, அதேநேரத்தில் எடப்பாடியை சந்தித்து அந்த சந்திப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறும் வகையில் வேலுமணியின் நடவடிக்கை இருப்பதாக அக்கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மாஜி அமைச்சர் உதயகுமாரை வெளியே அனுப்பிவிட்டு 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களை உண்டாக்கியிருப்பதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டு, பாஜவின் ஒன்றிய அமைச்சரை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டாக சென்று சந்திப்பது என்பதை ஏற்கவே முடியவில்லை. அப்படியானால் கூட்டணி முறிவு என்பது நாடகமா? என்ற கேள்வி எழுகிறது. ஜெயலலிதா இருக்கும் ேபாது இப்படியெல்லாம் ஒரு சந்திப்பு நடக்குமா? நடந்தால் அவர்கள் கட்சியில் நீடிக்க முடியுமா? என்று பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நினைத்துப்பார்க்க வேண்டும்’ என்றனர்.

* தமிமுன் அன்சாரி 30 நிமிடம் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, நேற்று சேலத்தில் உள்ள அவரது வீட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார். அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன் இருந்தார். பின்னர் வெளியே வந்த தமிமுன்அன்சாரி கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பேசும்படி கோரிக்கையை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் வைத்தேன். நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை. அதுகுறித்து டிசம்பர் மாதம் கட்சி செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது நாட்டுக்கு ஒரு நல்ல செய்தி. இது தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் சமூக நீதிக்கும் நலம் பயக்கும். தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட பெரிதும் உதவும். இதனால் அவருக்கு பாராட்டு தெரிவித்தோம்’ என்றார்.

The post எடப்பாடியுடன் எஸ்.பி.வேலுமணி 2 மணி நேரம் ரகசிய ஆலோசனை: மாஜி அமைச்சர் உதயகுமாரை வெளியேற்றிவிட்டு பேசியதால் ரோட்டில் காத்திருந்தார் appeared first on Dinakaran.

Tags : S.B. Velumani ,Edappadi ,Minister ,Udayakumar ,Salem ,Edappadi Palaniswami ,AIADMK ,SB ,Velumani ,S.P. Velumani ,
× RELATED பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்தை...