×

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் திட்ட பணிகளை மேயர் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 67, 68வது வார்டுக்கு உட்பட்ட பிருந்தாவன் நகர் முதல் மாடம்பாக்கம் வரை நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள், சுதர்சன நகரில் நடைபெறும் சாலை பணிகள் மற்றும் மழைநீர் தேங்குவதை தடுக்கும் பணிகள், காமாட்சி நகரில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் நடவடிக்கைகள், மல்லேஸ்வரி நகர் பூங்கா பராமரிப்பு பணி மற்றும் எம்ஜிஆர் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள், பாரத் நகரில் சாலை மற்றும் தெரு விளக்கு பணிகள் ஆகியவற்றை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, அம்பிகா நகரில் உள்ள பணிபுரிந்த தூய்மை பணியாளர்களிடம், குப்பையை தரம் பிரித்து சேகரிக்கவும், குப்பையை வாங்கும்போது கை உறைகள், முக கவசங்கள் அணிந்து பாதுகாப்பாக வாங்கவும், பொதுமக்கள் தரம் பிரிக்காமல் குப்பை வழங்கினால் அவற்றை வாங்காமல், தரம் பிரித்து தரும்படி கூறி பின்னர் வாங்குங்கள், என அறிவுரை வழங்கினர். அதேபோல், வீடுகளில் உள்ள பொதுமக்களையும் நேரில் சந்தித்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் குப்பையை கொடுக்கும்போது தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பின்னர் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 67வது வார்டில் ஒருபுறம் மாநகராட்சி சார்பில், மற்றொருபுறம் நெடுஞ்சாலை துறை சார்பில் என ரூ.7.5 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுதர்சன் நகர் 1, 6, 7வது குறுக்கு தெருகளில் பெரிய, பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அந்த பகுதியில் முறையாக கழிவுநீர் வெளியேற்றுவதற்கான வடிகால் இல்லை. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளதை பார்க்க முடிகிறது.

எனவே அப்பகுதியில் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி அமைத்து மோட்டார் மற்றும் பைப் லைன்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்றி மழைக்காலங்களில் இந்த பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார். மாமன்ற உறுப்பினர்கள் மாடம்பாக்கம் நடராஜன், ரமாதேவி செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் பொன் சதாசிவம், சாம்சன், ராஜாராமன், சாந்தகுமார், செல்வம், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் திட்ட பணிகளை மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Brindavan Nagar ,Madambakkam ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...