×

சீனாவிடம் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு நியூஸ்கிளிக் செய்தி நிறுவன ஆசிரியர் கைது: பல மணி நேர சோதனைக்குப் பின் டெல்லி சிறப்பு போலீசார் அதிரடி

புதுடெல்லி: சீனாவிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட சட்டவிரோதமாக நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் நியூஸ்கிளிக் செய்தி இணையதள ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா கைது செய்யப்பட்டார். டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூஸ்கிளிக் செய்தி இணையதள நிறுவனம் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணம் பெற்று, சீனாவுக்கு ஆதரவாகவும் சாதகமாகவும் செய்திகள் வெளியிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு போலீசார் நேற்று அதிகாலை செய்தி நிறுவன அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கினர்.

செய்தி நிறுவனத்தின் நிறுவனரும், ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தா தெற்கு டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அங்கு தடயவியல் அதிகாரிகளும் விரைந்தனர். செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் அபிஷர் சர்மா, பாஷா சிங், ஊர்மளேஷ், வரலாற்று ஆசிரியர் சோகைல் ஹஷ்மி உள்ளிட்டோர் வீடுகளிலும் போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களின் லேப்டாப், செல்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபிஷர் சர்மா, ஊர்மளேஷ் உள்ளிட்டோர் விசாரணைக்குப் பின், லோதி சாலையில் உள்ள சிறப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் வெளிநாட்டு பயணங்கள், ஷாஹீன் பாக் போராட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 25 கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களை சந்திக்க அவர்களது வக்கீல்களுக்கும் அனுமதி தரப்படவில்லை.

பல மணி நேர சோதனையைத் தொடர்ந்து, நியூஸ்கிளிக் நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்திற்கு சீல் வைத்த போலீசார், நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் மனிதவள மேம்பாட்டு பிரிவு தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகிேயாரை கைது செய்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து செய்தி வெளியிடும் நியூஸ்கிளிக் செய்தி நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெறுவதாக கடந்த 2021ம் ஆண்டிலிருந்தே விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட சிறப்பு செய்தியில், சீனாவின் ஆதரவாளரான அமெரிக்க தொழிலதிபர் நெவில் ராய் சிங்கமிடம் இருந்து நியூஸ் கிளிக் பணம் பெற்று சீன ஆதரவு செய்திகளை வெளியிடுவதாக கூறியிருந்தது.

இதன் அடிப்படையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) மற்றும் பிரிவு 153ஏ (இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டுவது), 120பி (குற்ற சதி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிந்து, நிதி ஆதாரங்களை ஆய்வு செய்ய அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா கைதாவதில் இருந்து தப்பினார். அமலாக்கத்துறையும் ஒன்றிய பொருளாதார குற்றப்பிரிவும் நியூஸ் கிளிக் நிறுவனத்தை தொடர்ந்து கண்காணிக்கின்றன. அந்த அமைப்புகள் தந்த தகவல்களின் அடிப்படையில் தற்போது டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு புதிதாக உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி செய்தி ஆசிரியர் பிரபிரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம்

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், எடிட்டர்ஸ் கில்ட் மற்றும் பிரஸ் கிளப் ஆப் இந்தியா உள்ளிட்ட பத்திரிகை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

* சட்டப்படி முழு சுதந்திரம் உள்ளது

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘‘இந்த சோதனையை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஒருவர் தவறு செய்திருந்தால், புலனாய்வு அமைப்புகள் அதன் வேலையை செய்யும். சட்டவிரோதமாக பணம் பெற்றிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரமும் உள்ளது. சட்டத்தின்படி அவை செயல்படுகின்றன. எனவே இவ்வாறு சோதனை நடத்தக் கூடாது என யாரும் கூற முடியாது’’ என்றார்.

The post சீனாவிடம் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு நியூஸ்கிளிக் செய்தி நிறுவன ஆசிரியர் கைது: பல மணி நேர சோதனைக்குப் பின் டெல்லி சிறப்பு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Newsclic ,China ,Delhi ,New Delhi ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன