×

இதர இந்தியா சாம்பியன்: இரானி கோப்பை கிரிக்கெட்

ராஜ்கோட்: ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், 175 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இதர இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இதர இந்தியா முதல் இன்னிங்சில் 308 ரன் குவித்து ஆல் அவுட்டானது (94.2 ஓவர்). அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 2ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்திருந்தது (80 ஓவர்).

நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் அந்த அணி மேற்கொண்டு 2 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது (83.2 ஓவரில் 214/10). இதையடுத்து, 94 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இதர இந்தியா 52 ஓவரில் 160 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. சாய் சுதர்சன் 43, மயாங்க் அகர்வால் 49, கேப்டன் ஹனுமா 22, சர்பராஸ் கான் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் பார்த் பட் 16 ஓவரில் 1 மெய்டன் உள்பட 53 ரன்னுக்கு 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இவர் முதல் இன்னிங்சிலும் 5 விக்கெட் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தர்மேந்திரசிங் 3 விக்கெட் எடுத்தார். இதைத் தொடர்ந்து, 255 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துரத்தலை தொடங்கிய சவுராஷ்டிரா, 34.3 ஓவரில் 79 ரன்னுக்கு சுருண்டது. தர்மேந்திரசிங் 21, ஹர்விக் 13, பிரேரக் 12, சமர்த் 10 ரன் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினர். இதர இந்தியா பந்துவீச்சில் சவுரவ் குமார் 6, ஷாம்ஸ் முலானி 3, புல்கிட் நரங் 1 விக்கெட் வீழ்த்தினர். 175 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இதர இந்தியா இரானி கோப்பையை கைப்பற்றியது.

The post இதர இந்தியா சாம்பியன்: இரானி கோப்பை கிரிக்கெட் appeared first on Dinakaran.

Tags : INDIA ,IRANI CUP ,RAJKOT ,RANCHI CHAMPION ,SAURASHTRA ,Rani Cup ,Cricket ,Dinakaraan ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!