நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய இடியுடன் கூடிய மழை கொட்டியது. வீடுகளுக்கு மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீனவர்கள் பெரும்பாலும் கடலுக்கு செல்லவில்லை. தொடர் மழையால் மின்சாரம் தாக்கியும், வீடு இடிந்தும் 4 பேர் பலியாகினர். குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள ஆற்றூர் தொப்பவிளை பகுதியை சேர்ந்தவர் சேம் (50). இவருக்கு சித்ரா (47) என்ற மனைவியும், ஆதிரா (24) என்ற மகளும், அஸ்வின் (19) என்ற மகனும் இருந்தனர். இவர்கள் வீட்டிற்கு ஆற்றூர் பிரதான சாலையில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் நடை பாதை வழியாக நடந்து செல்லவேண்டும். நேற்று மாலை 5.30 மணியளவில் அஸ்வின் பால் வாங்க வெளியே வந்துள்ளார். வீட்டில் இருந்து நடை பாதைக்கு வந்தபோது அங்கிருந்த சுவரை தொட்டபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த சகோதரி ஆதிரா தாயாரை அழைத்துள்ளார். தாய் சித்ரா மகனை தூக்க ஓடியுள்ளார். அவர் சென்று அஸ்வினை பிடித்தபோது அவரும் கீழே சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆதிராவும் ஓடி சென்று பிடிக்க முயன்றபோது அவரும் விழுந்தார். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மூவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதேபோல், தாழக்குடி அருகே மீனமங்கலம் காலனியை சேர்ந்த தொழிலாளி வேலப்பன் என்பவர் வீடு இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி பலியானார்.
The post குமரி மாவட்டத்தில் மழையால் அடுத்தடுத்து சோகம் மின்சாரம் தாக்கி தாய், மகன், மகள் பலி: வீடு இடிந்து முதியவர் சாவு appeared first on Dinakaran.