×

வெளிமாநில தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் மேற்கண்ட மனுக்களின் மீது விசாரணை செய்து நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் eShram மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம். மேற்கண்ட மனுவினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து, புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன் பெறலாம். எனவே, வெளி மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வெளிமாநில தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram ,District ,Kalaichelvi Mohan ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு