×

அக்டோபர் 10ம் தேதிக்குள் 41 தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க கனடாவுக்கு உத்தரவு: இந்தியா அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் இருக்கும் 41 தூதரக அதிகாரிகளை வரும் 10ம் தேதிக்குள் திரும்ப அழைக்கும்படி கனடாவுக்கு இந்தியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி அங்கு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். அதை தொடர்ந்து நிஜ்ஜார் கொலைக்கு உதவியதாக கூறி இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியது. இதை தொடர்ந்து இந்தியாவும் பதில் நடவடிக்கையாக டெல்லியில் இருந்து கனடா தூதரக அதிகாரியை வெளியேற்றியது.

அதன்பின்னர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை அளித்துவிட்டதாக கனடா தெரிவித்தது. இந்த விசாரணைக்கு இந்தியா உரிய முறையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா சென்று இருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அமெரிக்கா வலியுறுத்தியதால் பிரச்னை மேலும் தீவிரம் அடைந்தது. கனடா மக்களுக்கு விசா வழங்க மறுத்த இந்தியா, தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையையும் பெருமளவில் குறைத்தது. அதே போல் டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றும் தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்கும்படி ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது.

கனடா தூதரகத்தில் உள்ள 41 தூதரக அதிகாரிகளை வரும் 10ம் தேதிக்குள் திரும்பப் பெறுமாறு இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் தற்போது 62 அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். அந்த எண்ணிக்கையில் 41 தூதரக அதிகாரிகளை கனடாவுக்கு திருப்பி அனுப்ப ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த உத்தரவு இருநாட்டு உறவுகள் மேலும் மோசமடையும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் உத்தரவுப்படி கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்காதது தான் இந்த பிரச்னைக்கு காரணம் என்று தூதரக மட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* உறுதிப்படுத்தினார் கனடா பிரதமர்
கனடாவைச் சேர்ந்த 62 தூதரக அதிகாரிகளில் 41 பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில்,’ கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது முக்கியம். வெளிப்படையாக சொல்வதானால் நாங்கள் இப்போது இந்தியாவுடன் மிகவும் சவாலான நேரத்தைக் கடந்து வருகிறோம். இந்தியாவுடன் ஆக்கபூர்வமான உறவைத் தொடர்வதில் முக்கியமான பணியை நாங்கள் செய்யப் போகிறோம். நாங்கள் பதிலடி கொடுக்கப்போவதில்லை’என்று தெரிவித்தார்.

The post அக்டோபர் 10ம் தேதிக்குள் 41 தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க கனடாவுக்கு உத்தரவு: இந்தியா அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Canada ,India ,New Delhi ,Dinakaran ,
× RELATED கனடா சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி, பேரன் பலி