×

பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் வளர்ச்சித்திட்ட பணிகள் முடக்கம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் வளர்ச்சி திட்ட பணிகள் முடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு பேரூராட்சியில், செயல் அலுவலர் பணி நிரந்தரமாக நியமிக்கப்படாததாலும், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாலும் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. குறிப்பாக குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படைப் பணிகளும் தடைபட்டுள்ளது.

இங்கு பொறுப்பு செயல் அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்து தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கு மாத சம்பளம் மட்டும் வழங்க கோப்புகளில் கையொப்பமிட்டு சென்று விடுகின்றனர். இதனால், பேரூராட்சியில் அடிப்படைப் பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் கடமையாக முடங்கியுள்ளன.

பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள் இருந்தும், நிரந்தரமாக செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் இல்லாததால் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்னைகள், அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான தகவல்கள் பெறவும், புகார் செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சியில் பிறப்பு, இறப்பு, வீட்டு வரி, குழாய் வரி போன்ற குறைந்தபட்ச சேவைகள் பெறவும் மாத கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும், இதுவரை பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து பள்ளிப்பட்டு பேரூராட்சி புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

The post பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் வளர்ச்சித்திட்ட பணிகள் முடக்கம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Pallipatta Municipality ,Pallipattu ,Thiruvallur District… ,Dinakaran ,
× RELATED பள்ளிப்பட்டில் சேதமடைந்த மின் கம்பங்கள்: மாற்றியமைக்க கோரிக்கை