×

4 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை


கூடுவாஞ்சேரி: நல்லம்பாக்கம் ஊராட்சியில், புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, மல்ரோசாபுரம், அம்பேத்கர் நகர், காந்தி நகர், வலம்புரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே இதனை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகையில் பேருந்து நிறுத்தமும், நூலக கட்டிடமும் உள்ளது. இதனை, ஒட்டியபடி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில், ஆங்காங்கே கான்கிரீட்டில் விரிசல்கள் விடப்பட்டு சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கொட்டி வருகிறது. கம்பிகளும் நீட்டிக்கொண்டு வெளியே தெரிகிறது. குடிநீர் நீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதனை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், பழைய நீர்த்தேக்க தொட்டிக்கு பதில், கண்டிகையிலிருந்து நல்லம்பாக்கம் செல்லும் பிரதான சாலை ஓரத்தில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 15வது நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் கடந்த 2021-2022ம் ஆண்டு 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

மேலும், அதற்கான பணி தொடங்கி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது. இருப்பினும் இது வரை திறக்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள பழைய நீர்த்தேக்க தொட்டியை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’ என்றனர்.

The post 4 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Nallampakkam panchayat ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா 28ம் தேதி திறந்திருக்கும்