×

சின்னமனூர் அருகே சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி இயற்கை எழில் சூழ்ந்த மலை; மேகங்கள் தவழும் மேகமலை: கண்ணைக் கவரும் தேயிலை தோட்டங்கள்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக மேகங்கள் தவழும் மேகமலை திகழ்கிறது. மலைக்குன்றுகளில் கண்ணைக் கவரும் தேயிலை தோட்டங்கள், மலைப்பாதையில் சிலுசிலுக்கும் அருவிகள், சிலிர்க்க வைக்கும் யானைக் கூட்டங்கள் என கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து அளிக்கிறது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஹைவேவிஸ், மேகமலை, மகாராஜன்மெட்டு, இரவங்கலார் உள்ளிட்ட 7 மலைக்கிராமங்களும், 5 அணைகளும் உள்ளன. சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த ஊருக்கு செல்ல, சின்னமனூரிலிருந்து செல்ல தென்பழனி மலையடிவாரம் செல்ல வேண்டும். அங்கிருந்து ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு செல்லலாம். கடைசி மலைக்கிராமமாக இரவங்கலாறு உள்ளது. தென்பழனி மலையடிவாரத்திலிருந்து இரவங்கலாறு வரை மலைப்பாதையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ளன.

கடந்த 1978ம் ஆண்டு ஹைவேவிஸ், தூவானம், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு ஆகிய பகுதிகளில் 5 அணைகள் கட்டப்பட்டு மழைநீர் தேக்கப்பட்டது. தூவானம் பகுதியில் பெய்யும் மழைநீரே கம்பம் அருகே சுருளி அருவியாக தண்ணீரை கொட்டுகிறது. 4 அணைகளில் இருந்து சுரங்கப்பாதை வழியாக தண்ணீரை பம்ப்பிங் செய்து இரவங்கலாறு அணையில் தேக்கி லோயர்கேம்ப் அருகில் உள்ள சுருளி மின்உற்பத்தி நிலையத்திற்கு மகாராஜன் மெட்டு வழியாக ஒற்றைக் குழாயில் தண்ணீரை அனுப்பி தினந்தோறும் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இயற்கை எழில் சூழ்ந்த மேகமலை…
இயற்கை எழில் மிகுந்த இந்த பேரூராட்சியில் வானுயர்ந்த மரங்கள், பசுமை போர்த்திய மலைக்குன்றுகள், வளைந்து நெளிந்து செல்லும் தார்ச்சாலை, சிலுசிலுக்கும் நீரோடைகள் என சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இப்பகுதியில் அடுக்கம்பாறை, அந்துவான், சில்வர் குடுசு, ஆனந்தா, மேகமலை, கலெக்டர் காடு எஸ்டேட்டுகள், மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகராஜன் மெட்டு, இரவங்கலார் ஆகியவற்றில் தேயிலை, காப்பி தோட்டங்கள் உள்ளன. சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஏலம், காப்பி, மிளகு, ஆரஞ்சு உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மலைச்சாலைகளில் சின்னஞ்சிறு அருவிகள். வெள்ளியை உருக்கி ஊற்றியது போல தண்ணீரை கொட்டிக் கொண்டே இருக்கின்றன. இவைகளை சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். அருவிகளில் சிங்கவால் குரங்கு, மைனா, கொக்கு ஆகியவை விளையாடும்.

ஆண்டுக்கு 8 மாதம் மழை…
கேரள மாநிலம், தேக்கடி பகுதியை ஒட்டி இந்த மேகமலை இருப்பதால், ஆண்டுக்கு 8 மாதம் மழை பெய்யும். தேயிலை தோட்டத்தில் காட்டுமாடுகள், யானைகள் தங்களது குட்டிகளுடன் உலா வரும். இரை தேடிவிட்டு அணைப்பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தாகம் தீர்க்கும் யானைகள், தங்களது குட்டிகளை தும்பிக்கையால் குளிப்பாட்டும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வனப்பகுதியில் யானைக் கூட்டங்கள், சிறுத்தை புலிகள் வரிப்புலிகள், காட்டு மாடுகள், வரிக்குதிரைகள், அரியவகை பாம்பு இனங்கள், சிங்கவால் குரங்குகள், கருஞ்சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல உயிரினங்கள் வசித்து வருகின்றன. தற்போது மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாத்து வருகின்றனர்.

சுற்றுலாத் தலமாக அறிவிப்பு…
கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர், ஹைவேவிஸ் மலைப்பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவித்தார். 3 ஆண்டுகள் கோடை விழாவும் நடைபெற்றது. இதனால், தொழிலாளர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த, அப்போதைய திமுக அரசு கடந்த 2009ல் முயற்சி எடுத்தது. ஆனால், அடுத்து வந்த அதிமுக ஆட்சி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2015ல் 7 மலைக்கிராமங்களுக்கும் ரூ.86.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலையோரங்களில் உயர்ந்த தடுப்புச்சுவர்கள். சாலை விரிவாக்கம், நூற்றுக்கும் மேல் பாலங்கள் அமைக்கப்பட்டது. இயற்கை எழில் மிகுந்த இந்த சுற்றுலாத் தலத்தை காண தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து கண்டுகளிக்கின்றனர்.

செல்வது எப்படி…
மேகமலையை கண்டுகளிக்க தேனியிலிருந்து சின்னமனூர் செல்ல வேண்டும். அங்கிருந்து மேகமலைக்கு அரசு பஸ் உள்ளிட்ட 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது தொடர் மழை பெய்து வருவதால், அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

The post சின்னமனூர் அருகே சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி இயற்கை எழில் சூழ்ந்த மலை; மேகங்கள் தவழும் மேகமலை: கண்ணைக் கவரும் தேயிலை தோட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Chorkapuri ,Meghamalai ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்