×

கனமழையால் பாதிப்படைந்துள்ள கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு மக்களை காப்பாற்றிட வேண்டும்: வி.கே.சசிகலா வலியுறுத்தல்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு மக்களை காப்பாற்றிட வேண்டும் என வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாழக்குடியில் உள்ள மீனமங்கலம் பகுதியில் ஓட்டு வீடு இடிந்து விழுந்து வேலப்பன் என்ற முதியவர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்த முதியவர் வேலப்பன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் குருந்தன் கோடு பகுதியில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில் தாழக்குடியில் உள்ள மீனமங்கலம் பகுதியில் ஓட்டு வீடு இடிந்து விழுந்து வேலப்பன் என்ற முதியவர் உயிரிழந்திருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. மேலும், மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது. எனவே, உயிரிழந்த வேலப்பன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும், மழையினால் முறிந்து விழுந்துள்ள மரங்களை உடனே அப்புறப் படுத்திடவேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோன்று, தொடர் மழை காரணமாக தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளதால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பாதிப்படைந்துள்ள மீனவ குடும்பங்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை விரைந்து செய்திட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், கடந்த ஐந்து நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில், தொடர் கன மழை பெய்துவரும் நிலையில் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான கோதையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விடியவிடிய கனமழை பெய்துள்ள நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அபாய அளவை எட்டிவிட்டதாக தெரியவருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களையும், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களின் அடிப்படை தேவையான குடிநீர், உணவு தங்குமிடம் போன்றவற்றை உடனே ஏற்பாடு செய்து தர வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு தாழ்வான பகுதியில் இருப்பவர்களையும், மழையால் பாதிப்புக்குள்ளானவர்களையும் உடனே பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்.

மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிப்படைந்துள்ள மீனவ சமுதாயத்தினருக்கும் தேவையான நிவாரண உதவிகளை உடனே வழங்கிட வேண்டும். மேலும், அனுபவம் நிறைந்த அரசு அதிகாரி தலைமையில் ஒரு குழுவை நியமித்து அவர்களை உடனே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேரில் அனுப்பி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து, மழையால் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு மக்களை காப்பாற்றிட வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post கனமழையால் பாதிப்படைந்துள்ள கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு மக்களை காப்பாற்றிட வேண்டும்: வி.கே.சசிகலா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kanniyakumari ,V. K. ,Sasikala ,Chennai ,Kanniyakumari district ,K. Chasikala ,V. K. Sasikala ,Dinakaraan ,
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!