×

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தியமே இல்லாதது என்பது போன்ற மாயை ஏற்படுத்தப்பட்டு வந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது பீகார் மாநில அரசு. இதன் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ஆக்கப்பூர்வமான வகையில் வழிகாட்டியிருக்கிறார் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்.

இதற்காக அவருக்கு எனது பாராட்டுகள். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சமூகநீதியை நிலைநிறுத்துவதற்கான அடித்தளம் மட்டும் தான். அந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது தான் இந்த சமூகநீதிப் பயணம் அதன் இலக்கை எட்டும். அதற்கான நடவடிக்கைகளை பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பீகாரில் ஏற்றப்பட்டுள்ள சமூகநீதி விளக்கு வெகுவிரைவில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒளி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அம்மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36%, பட்டியலினத்தவர் 19.7%, பழங்குடியினர் 1.70%, இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினர் 15.50% இருப்பதும், சாதிகளைப் பொருத்தவரை யாதவர் சமுதாயம் 14.26% மக்கள்தொகையுடன் தனிப்பெரும் சாதியாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இது குறித்து விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க இருக்கும் பீகார் மாநில அரசு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்பது குறித்தும் தீர்மானித்து செயல்படுத்தவுள்ளது. பீகார் அரசின் இந்த முயற்சியும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பீகாருக்கு முன்பே கர்நாடகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மாறாக, பீகார் அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளையும் வெளியிட்டிருக்கிறது. அதன் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான பல்வேறு மாயைகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டு வந்தது; மத்திய அரசும் அதே நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், மாநில அரசுக்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் உண்டு என்பதை பீகார் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன்மூலம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். இதை பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சமூகநீதி ஒளி வழங்குவதில் ஆர்வமுள்ள அனைத்து மாநிலங்களும், குறிப்பாக தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் மேற்கொள்ளப்படாத நிலையில், மத்திய அரசும் அதை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Anbumani ,CHENNAI ,DMK government ,PMK ,Anbumani Ramadoss ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...