×

குற்ற வழக்கில் 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் அசாதாரணமான சூழ்நிலையில் தண்டனையை நிறுத்திவைக்க மனு தாக்கல் செய்ய தேவையில்லை: ஐகோர்ட் விளக்கம்

சென்னை: குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தண்டனையை நிறுத்திவைக்க கோருவதற்கு சில வழக்குகளில் மனு தாக்கல் செய்வது கட்டாயமில்லை என்று ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடலூர் மற்றம் ரெட்டிசாவடி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் 10 பேருக்கு கடந்த 2020ல் கடலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் 3 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து முதல் குற்றவாளியான லட்சுமணன் உள்ளிட்ட 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகினார். அப்போது, ராஜ்குமார் என்பவர் தவிர மற்ற 9 பேரும் தண்டனையை நிறுத்திவைக்க கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் லட்சுமணன் தவிர மற்ற 8 பேரின் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில், ராஜ்குமாருக்கும் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கோரினார்.

அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரத்திடம் நீதிபதிகள், தண்டனையை நிறுத்திவைக்க கோரி மனு தாக்கல் செய்யாத நிலையில் தண்டனையை நிறுத்திவைக்க முடியுமா என்று விளக்குமாறு கேட்டனர். அதற்கு அட்வகேட் ஜெனரல், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 389ன் கீழ் மனு தாக்கல் என்பது கட்டாயமில்லை. சில தகுதிவாய்ந்த வழக்குகளில் நீதிமன்றம் தானாக முன்வந்து தண்டனையை நிறுத்திவைக்கலாம் என்று விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ராஜ்குமார் தவிர மற்ற 8 பேருக்கும் தண்டனை நிறுத்திவைத்தது ராஜ்குமாருக்கும் பொருந்தும்.

அவர் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளதால் மற்ற குற்றவாளிகளைப்போல் அவருக்கும் தண்டனையை நிறுத்திவைக்க கோர உரிமை உள்ளது. எனவே, அவரது தண்டனை நிறுத்திவைக்கப்படுகிறது. அதே நேரத்தில் அசாதாரணமான சூழ்நிலையில்தான் இதுபோன்று முடிவெடுக்க முடியும் என்று அட்வகேட் ஜெனரல் தெரிவித்ததுள்ளார். எனவே, 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற மற்ற குற்றவாளிகள் இந்த உத்தரவை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உத்தரவிட்டனர்.

The post குற்ற வழக்கில் 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் அசாதாரணமான சூழ்நிலையில் தண்டனையை நிறுத்திவைக்க மனு தாக்கல் செய்ய தேவையில்லை: ஐகோர்ட் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...