×

வணிக சிலிண்டர் விலை உயர்வு சிறு வணிகர் மீதான தாக்குதல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு ரூ.203 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.157 ரூபாய் குறைந்த நிலையில், இந்த மாதம் ரூ.203 அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் ரூ.1,695க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை தற்போது ரூ.1,898 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள்-தேநீர் கடை வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும்-முறைபடுத்தப்படாத ஜிஎஸ்டி-பணமதிப்பு நீக்கம்-கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது. இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post வணிக சிலிண்டர் விலை உயர்வு சிறு வணிகர் மீதான தாக்குதல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Udhayanidi Stalin ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின்...