×

கொரோனோ தடுப்பூசி கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு: இயற்பியலுக்கான பரிசு இன்று அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த விருதுக்கு ஹங்கேரி நாட்டின் சாகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஹங்கேரிய அமெரிக்கரான கேட்டலின் கரிக்கோவும், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் ட்ரூ வைஸ்மேனும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து, கொரோனா வைரசுக்கு எதிரான எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசியை கண்டறிந்தனர். இதன் அடிப்படையிலேயே அமெரிக்காவின் பைசர் உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல உயிர்களை கொரோனாவிடமிருந்து காப்பாற்றி உள்ளன.

மருத்துவத்தை தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்றும், வேதியியலுக்கான நோபல் நாளையும், இலக்கியத்துறைக்கான பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்திற்கான விருது வரும் 9ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன. ஸ்வீடன் ஆராய்ச்சியாளர் ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும்.

The post கொரோனோ தடுப்பூசி கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு: இயற்பியலுக்கான பரிசு இன்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Stockholm ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் செர்ரி மலர்கள் திருவிழா..குவியும் மக்கள்..!!