நான்டெட்: மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் நான்டெட்டில் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ஒரே நாளில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 70 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் சிலர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க மருந்து இல்லாததால் பலியானதாகவும், சிகிச்சை அளிக்க நர்ஸ் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் இல்லாமல் போனதாலும் உயிரிழந்ததாக அவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை தலைமை டாக்டர் கூறுகையில், ‘‘ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் உள்ளது. 70 முதல் 80 கிமீட்டர் சுற்றளவுக்கு இங்கு வேறெந்த பெரிய மருத்துவமனையும் இல்லாததால் பெரும்பாலானோர் இங்குதான் சிகிச்சை வருவார்கள். மருந்து பற்றாக்குறையை ஈடுசெய்ய அருகிலுள்ள மருந்து ஏஜென்சிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அது தேவையை ஈடு செய்வதாக அமையவில்லை என்று தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஷிண்டே உறுதி அளித்துள்ளார்.
The post மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 24 பேர் பலி appeared first on Dinakaran.