×

பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரம் வெளியீடு பீகாரில் பி.சி, எம்.பி.சி 63%: பொதுபிரிவினர் 15 சதவீதம்

பாட்னா: பீகாரில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் ஆகிய இரண்டு பிரிவினர் 63 % உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி அரசு நடந்து வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய அரசிடம் முதல்வர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார். ஆனால், தலித்துகள், பழங்குடியினரை தவிர மீதி உள்ள சமூகத்தினர் பற்றி கணக்கெடுப்பை நடத்த வாய்ப்பு இல்லை என ஒன்றிய அரசு நிராகரித்தது.

இதையடுத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதற்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை பீகார் அரசின் மேம்பாட்டு ஆணையர் விவேக் சிங் நேற்று வெளியிட்டார். அதன்படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.07 கோடி. அதில், 36 % உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (எம்.பி.சி) மிக பெரிய சமூக பிரிவாக உள்ளனர். அவர்களுக்கு அடுத்த படியாக பிற்படுத்தப்பட்டோர் (பி.சி) 27.13 % உள்ளனர். ஒட்டுமொத்தமாக பிற்படுத்தப்பட்டோர் 63 % இருக்கின்றனர்.பொது பிரிவினர் 15.52 % ஆகும். பிற்படுத்தப்பட்டோரில் அதிகளவாக யாதவ சமுதாயத்தினர் 14.27 % உள்ளனர்.

தலித்துகள் 19 %, பழங்குடியினர் 1.68 % , பிராமணர் 3.66 % , குர்மி 2.87 % , முசாஹர் 3 % என தெரியவந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில், இந்துக்கள் 81.99 %, முஸ்லிம்கள் 17.70 %,கிறிஸ்தவர்கள், சீக்கியர், ஜெயின் உள்ளிட்ட மதங்களை சார்ந்தவர்கள் 1 % குறைவாகவே உள்ளனர். முதல்வர் நிதிஷ் வெளியிட்ட அறிக்கையில், மிக பெரிய அளவிலான கணக்கெடுப்பு பணியை முடித்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள். சட்டபேரவையில் இடம் பெற்றுள்ள 9 அரசியல் கட்சிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கூறும்போது, ‘‘இது முக்கிய வரலாற்று தருணம்.

இந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம் இனி நாடு முழுவதும் ஜாதி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கைகள் எழும். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி ஏற்பட்டதும் இது போல் விவரங்கள் சேகரிக்கப்படும்’’ என்றார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பொது செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா கூறுகையில்,‘‘ 1931ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பிற்பட்டோர் மக்கள் தொகை 52 % என தெரிவிக்கப்பட்டிருந்தது.அதனடிப்படையில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 52 % வழங்குவதற்கு மண்டல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. அவர்களுடைய எண்ணிக்கை 3ல் 2 பங்காக அதிகரித்துள்ளதால் இந்த விஷயத்தில் மறு ஆய்வு நடத்த வேண்டும்’’ என்றார்.

*ஜாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்துவதை பா.ஜ எதிர்க்கிறது: மோடி
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நேற்று பேசிய பிரதமர் மோடி,’காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் வளர்ச்சிப்பணியை மேற்கொள்ள தவறிவிட்டனர். ஆனால் 9 ஆண்டுகளில் பா.ஜ ஆட்சியில் மகத்தான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகமே இந்தியாவைப் புகழ்ந்து பாடுகிறது. 9 ஆண்டுகளில் இவ்வளவு வேலைகள் நடக்கும் போது, ​​அதை ஏன் இத்தனை ஆண்டுகளில் செய்ய முடியவில்லை? அவர்கள் ஏழைகளின் உணர்வுகளோடு விளையாடி, சாதிய அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தினார்கள். இப்போதும் இந்தப் பாவத்தைச் செய்கிறார்கள். ஜாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்துவதை பா.ஜ எதிர்க்கிறது’ என்றார்.

*தேசிய அளவில் கணக்கெடுப்பு காங்கிரஸ் கோரிக்கை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிடுகையில், இந்த கணக்கெடுப்பின் மூலம் பீகாரில் 84 % மக்கள் பிற்படுத்தப்பட்டோர்.தலித் மற்றும் பழங்குடியினர் என்பது தெளிவாகிறது. ஒன்றியத்தில் உள்ள 90 அரசு துறை செயலாளர்களில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர்கள். எனவே நாடுமுழுவதும் ஜாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம்தான் சமூக நீதி அளிக்க முடியும் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,காங்கிரஸ் ஆட்சியில் இதுமாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை மோடி அரசு வெளியிடவில்லை என தெரிவித்துள்ளார்.

The post பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரம் வெளியீடு பீகாரில் பி.சி, எம்.பி.சி 63%: பொதுபிரிவினர் 15 சதவீதம் appeared first on Dinakaran.

Tags : Citi Wary ,Bihar ,Patna ,Citi ,Dinakaran ,
× RELATED பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க...