×

போபால் கூட்டம் ரத்தான நிலையில் 5 மாநில தேர்தல் முடிந்த பின்னர் தான் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு? ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தகவல்

புதுடெல்லி: போபால் கூட்டம் ரத்தான நிலையில் 5 மாநில தேர்தல் முடிந்த பின்னர் தான் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு நடக்கும் என்று ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஒருவர் கூறினார். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மூன்றில் பாஜகவுடன் காங்கிரஸ் நேரடிப் போட்டியை சந்திக்கிறது. இருகட்சிகளும் 5 மாநில தேர்தல் விஷயத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. அதேநேரம் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி உருவாகி மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டமும் நடந்து முடிந்தது. ெதாடர்ந்து மும்பையில் நடந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த செப். 13ம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் டெல்லி வீட்டில், ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அப்போது 4 முக்கிய விசயங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்து இறுதிசெய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அக்டோபர் மாதத்திற்குள் (இந்த மாதம்) கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது, ஆனால் இதுவரை ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த கூட்டம் கூட்டப்பட வில்லை. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடக்கவிருந்த கூட்டணி தலைவர்களின் பேரணியும் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக கூட்டணியின் கூட்டுப் பேரணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 5 மாநில தேர்தல் முடிந்த பிறகுதான் ‘இந்தியா’ தொகுதி பங்கீடு நடைபெறும் என்றும், டிசம்பர் மாதத்திற்கு பின்னர் தான் ‘இந்தியா’ கூட்டணியின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

The post போபால் கூட்டம் ரத்தான நிலையில் 5 மாநில தேர்தல் முடிந்த பின்னர் தான் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு? ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bopal ,India ,New Delhi ,Bopal Sabha ,alliance ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை