×

மழை குறைவால் இளநீர் அறுவடை தீவிரம்; விற்பனைக்காக தினமும் 5 லட்சம் இளநீர் அனுப்ப இலக்கு: பொள்ளாச்சியில் வெளியூர் வியாபாரிகள் நேரடி கொள்முதல்


பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் தென்னை சாகுபடியே அதிகளவு உள்ளது. இதில், உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு வெளி மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆண்டுதோறும், இளநீர்கள் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி, மழைக்காலங்களிலும் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், அதிகளவில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. நடப்பாண்டில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தினமும் சுமார் 3.50 லட்சம் வரையிலான இளநீர், வெளி வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் இறுதி முதல் மே மாதம் 2வது வாரம் வரையிலும் அவ்வப்போது கோடை மழை பெய்தது. அதன்பின், ஜூன் இறுதி முதல் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்து, ஜூலை மாதம் இறுதி வரையிலும் என சுமார் ஒரு மாதம் இளநீர் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் மழையால், தென்னையில் உற்பத்தியாகும் இளநீரின் எண்ணிக்கை அதிகமானது. இப்போதைய சூல்நிலையில், தேங்காய் விலை சரிவால், பெரும்பாலான விவசாயிகள், இளநீராக அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைப்பதை அதிகரித்துள்ளனர். தற்போது, சமவெளி பகுதிகளில் மழை குறைவால் இளநீர் அறுவடை மேலும் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டின் பலவேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்களில் அனுப்பப்படும் இளநீரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

பொள்ளாச்சி இளநீருக்கு உள்ள கிராக்கியால், நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் வரையிலான இளநீர் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால், பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் பொள்ளாச்சிக்கே நேரடியாக வந்து தோட்டங்களில் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து இளநீர் கொள்முதல் செய்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி அதிகரித்துள்ளது. பண்ணை விலை குறைந்தாலும், உற்பத்தி அதிகரித்து விற்பனை விறு விறுப்பால், விவசாயிகள் மட்டுமின்றி, வியாபாரிகளுக்கு ஓரளவு லாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆனைமலை பகுதி இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கூறுகையில்,‘‘பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் உற்பத்தியாகும் இளநீரில், நல்ல குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, தற்போது பண்ணை விலையாக ரூ.34 என நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் மழை இல்லாததால், இளநீர் அறுவடை அதிகரித்ததுடன் அதன் தேவையும் அதிகமாகியுள்ளது. அதிலும், சண்டிகர், ராஜஸ்தான், ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போதைய சூல்நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, உடுமலை பகுதியில், இளநீர் அறுவடை அதிகரித்து அதன் விலை சற்று சரிந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவில், நாள் ஒன்றுக்கு சுமார் 4.50 லட்சத்துக்கு மேல், இளநீர் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. வரும் நாட்களில் இளநீரின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும்போது நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வரையிலான இளநீர் அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.

The post மழை குறைவால் இளநீர் அறுவடை தீவிரம்; விற்பனைக்காக தினமும் 5 லட்சம் இளநீர் அனுப்ப இலக்கு: பொள்ளாச்சியில் வெளியூர் வியாபாரிகள் நேரடி கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Animalai ,Pollachi Revenue ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...