×

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு ராஜேஸ்குமார் எம்.பி., பரிசு வழங்கினார். நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கிடையிலான கூடைப்பந்து போட்டி 2 நாட்கள் நடந்தது. ஒரு அணிக்கு 3 பேர் மட்டுமே விளையாடினர். போட்டிக்கு மொத்தம் 10 நிமிடம் மட்டுமே வழங்கப்பட்டது. இதில், நாமக்கல் மற்றும் சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 90 அணிகளைச் சேர்ந்த 270 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஜூனியர் பிரிவில் 2 பிரிவாகவும், சீனியர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு தனித்தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், சேலம் செயிண்ட் மேரீஸ் அணியும், மாணவிகள் பிரிவில் ஈரோடு ராஜேந்திரா பள்ளி அணியும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் சேலம் ஸ்பார்க் அணியும், மாணவிகள் பிரிவில் சேலம் சாரதா பள்ளி அணியும் முதலிடம் பிடித்தன.

சீனியர் பிரிவில் ஆண்கள் அணியில் சேலம் திரிவேணி அகடாமி அணி முதலிடம், பெண்கள் பிரிவில் திருச்செங்கோடு பிஆர்டி அணி முதலிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்றிரவு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினர். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில், நகர செயலாளர் ராணா ஆனந்த், நகர்மன்ற தலைவர் கலாநிதி, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் முரளி, பொறியாளரணி அமைப்பாளர் கிருபாகரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பொன்.சித்தார்த், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, சுரேஷ், ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Rajeskumar ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...