×

பூந்தமல்லியில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் பார்வையற்றோர் பள்ளியை சுத்தம் செய்த மத்திய ரிசர்வ் போலீசார்

 

பூந்தமல்லி, அக்.2: ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், பார்வையற்றோர் பள்ளியை மத்திய ரிசர்வ் போலீசார் சுத்தம் செய்தனர். ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மையே சேவை இயக்கம் சார்பில் ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன் படி நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். பூந்தமல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை 77வது பட்டாலியன் பிரிவு சார்பில். கமாண்டண்ட் பரமேந்தர் சிங் யாதவ், கூடுதல் கமாண்டண்ட் ஆஷீஸ் குமார், மித்து ராய் ஆகியோர் தலைமையில் ‘தூய்மையே சேவை’ திட்டத்தின் படி பூந்தமல்லி பார்வைக்குறைபாடுடையோர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர்.

இதில் ஏராளமான மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் செடி, கொடிகள், புதர்கள், குப்பைகளை சுத்தம் செய்து அகற்றினர். இது குறித்து கூடுதல் கமாண்டண்ட் ஆஷீஸ் குமார் கூறும்போது, ‘‘தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை 77வது பட்டாலியன் போலீசார் பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான மாற்றுத்திறனாளிகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

காந்தியின் தூய்மை இந்தியா என்ற கனவை நிறைவேற்ற சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்,’’ என்று அவர் தெரிவித்தார். இதே போல தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், திட்ட இயக்குநர் ரவீந்தர ராவ் தலைமையில் வானகரம் சுங்கச்சாவடி மற்றும் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் சேதிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். இதில், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி கலந்து கொண்டு நெடுஞ்சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

The post பூந்தமல்லியில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் பார்வையற்றோர் பள்ளியை சுத்தம் செய்த மத்திய ரிசர்வ் போலீசார் appeared first on Dinakaran.

Tags : Central Reserve Police Force ,Poontamalli ,Central Reserve Police ,
× RELATED என்.எஸ்.ஜி. தலைவராக நளின் பிரபாத் நியமனம்