×

குன்னூர் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்ததில் பலி 9 ஆக உயர்வு: பிரேக் பிடிக்காததால் விபத்து

ஊட்டி: தென்காசி மாவட்டம், கீழ கடையம் பகுதியை சேர்ந்த 61 பேர் கடந்த வியாழக்கிழமை தனியார் பஸ்சில் கேரள மாநிலம் கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் காலை மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்கு வந்தனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பின்னர் நேற்று முன்தினம் மாலை கோவை மருதமலை முருகன் கோயில் செல்வதற்காக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை வழியாக மலைப்பாதையில் பயணித்தனர். பஸ்சை டிரைவர் முத்துக்குட்டி ஓட்டினார். மாலை 5.30 மணியளவில் மரப்பாலம் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து குன்னூர் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் முப்பிடாதி (67), முருகேசன் (65), இளங்கோ (64), பேபிகலா (42), கவுசல்யா (29), ஜெயா (50), தங்கம் (40), நிதின் (15) ஆகியோர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேறு யாரேனும் பள்ளத்தில் சிக்கியிருக்கிறார்களா? என மீட்பு குழுவினர் நேற்று அதிகாலை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சுக்கு அடியில் பெண் ஒருவரின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் பெயர் பத்மராணி (58) என தெரிந்தது. இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடங்குவர். பிரேத பரிசோதனைக்குப்பின் நேற்று மதியம் 1 மணியளவில் இறந்த அனைவரின் உடல்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக குன்னூர் காவல் நிலையத்தில் பஸ் உரிமையாளர் சுப்பிரமணி (63), ஓட்டுநர்கள் முத்துக்குட்டி (65), கோபால் (32) மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் (64) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* அமைச்சர்கள் அஞ்சலி

குன்னூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று அமைச்சர்கள் மா.சுப்பிமணியன், ராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்கே பிரபாகர், மாவட்ட கலெக்டர் அருணா, மாவட்ட எஸ்பி பிரபாகர் வந்து உயிரிழந்தோரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சிகிச்சை பெற்று வரும் 32 பேரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவிக்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார். ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 பேருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலா ரூ.1 லட்சம் காசோலையை வழங்கினார்.

* மரத்தால் உயிரிழப்பு குறைவு

காவல்துறை தரப்பில் கூறுகையில், ‘‘டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தபோது அங்கிருந்த மரம் ஒன்றின் மீது மோதி நின்றது. மரம் இல்லையென்றால் மேலும் பல அடி தூரத்திற்கு பஸ் உருண்டு சென்று உயிரிழப்பு அதிகரித்திருக்கும். பஸ்சில் பயணிகள் அலறியடித்து துடித்ததை கண்ட வாகன ஓட்டுநர்கள் சிலர், உடனடியாக காவல்துறைருக்கு தகவல் கூறியுள்ளனர். தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டோம்’’ என்றனர்.

* டிரைவர் தப்பி ஓட்டம்

தென்காசியில் இருந்து சுற்றுலா பஸ் புறப்பட்டபோது கோபால், முத்துக்குட்டி ஆகிய 2 டிரைவர்கள் வந்துள்ளனர். ஊட்டியில் சுற்றுலா தலங்களை பார்த்த பின்னர், கோவை புறப்பட்டபோது பஸ்சை கோபால் ஓட்டியுள்ளார். மலை சாலையில் கியர் கட்டுப்பாட்டில் பஸ்சை இயக்காமல் அதிவேகமாகவும், அடிக்கடி பிரேக் பயன்படுத்தியும் ஓட்டி வந்ததாக தெரிகிறது. இதில் கிளட்ச் மற்றும் பிரேக் டிரம் சூடாகி நாற்றம் வந்துள்ளது. குன்னூர் வந்தவுடன் பஸ்சை மற்றொரு டிரைவர் முத்துக்குட்டி ஓட்டியுள்ளார். குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மெதுவாக சென்றுள்ளார். இருந்தபோதும் மரப்பாலம் அருகே பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் முத்துக்குட்டி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய டிரைவர் கோபால் மாயமாகிவிட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.

 

The post குன்னூர் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்ததில் பலி 9 ஆக உயர்வு: பிரேக் பிடிக்காததால் விபத்து appeared first on Dinakaran.

Tags : Coonoor hill ,Ooty ,Tenkasi district ,Keeza Kadayam ,Kerala ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...