×

நாடு முழுவதும் 9.2 லட்சம் இடங்களில் தூய்மை பணி: டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி அழைப்பு விடுத்த தூய்மை இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் 9.2 லட்சம் இடங்களில் நேற்று தூய்மைப் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டனர். டெல்லியில் பிரதமர் மோடி துடைப்பம் ஏந்தி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி தனது கடந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியில், “மக்கள் அனைவரும் அக்டோபர் 1ம் தேதி ஒரு மணி நேரம் தன்னார்வ தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். இது மகாத்மா காந்தியின் பிறந்த நாளுக்கு நாம் செய்யும் தூய்மை அஞ்சலியாகும்,” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அரசியல்வாதிகள் முதல் மாணவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் துடைப்பம் ஏந்தி நேற்று ஒரு மணி நேரம் தன்னார்வ தூய்மை பணியில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் 9.2 லட்சம் இடங்களில் தூய்மை பணியில் ஏராளமானோர் ஈடுபட்டனர். இந்த தன்னார்வ தூய்மை இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்தினார். இந்த இயக்கத்தில் பிரதமர் மோடி உடற்பயிற்சி நிபுணர் அங்கித் பையான்புரியாவுடன் துடைப்பம் ஏந்தியபடி தூய்மை பணியில் பங்கேற்றார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளத்தில் 4 நிமிட வீடியோவைப் பகிர்ந்த மோடி, ‘‘இன்று, தேசம் தூய்மையில் கவனம் செலுத்துவதால், அங்கித் பையான்புரியாவும் நானும் அதையே மேற்கொண்டோம். தூய்மையைத் தாண்டி, உடற்தகுதி மற்றும் நல்வாழ்வையும் ஒன்றாக இணைத்தோம். இது அனைத்தும் தூய்மை மற்றும் தூய்மை இந்தியாவின் உத்வேகத்தைப் பற்றியது,” என்று கூறியுள்ளார். தன்னார்வ தூய்மை சேவையில் அமைச்சர்கள், பாஜ மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அகமதாபாத்தில் நடந்த தூய்மைப் பணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், டெல்லியின் ஜண்டேவாலனில் பாஜ தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.

ஒன்றிய நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், மதக் குழுக்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவை தன்னார்வத்துடன் முன்வந்து, 22,000 க்கும் மேற்பட்ட மார்க்கெட் பகுதிகள், 10,000 நீர்நிலைகள், 7,000 பேருந்து நிலையங்கள் மற்றும் சுங்கச் சாவடிகள், 1,000 கோசாலைகள், 300 உயிரியல் பூங்கா மற்றும் வனப்பகுதிகளை சுத்தம் செய்தன,” எனத் தெரிவித்துள்ளது.

* நாடு முழுவதும் 9.20 லட்சம் இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

* உ.பி.யில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மை பணி நடந்தது.

* தெலங்கானாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

* டெல்லியில் 500 இடங்களில் தூய்மைப் பணிகள் நடந்தது.

The post நாடு முழுவதும் 9.2 லட்சம் இடங்களில் தூய்மை பணி: டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi New Delhi ,Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…