
சென்னை: சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இஸ்ரோ என்றழைக்கப்பட கூடிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திரயான்-3, ஆதித்தியா எல்-1 உள்ளிட்ட பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அதன்படி, அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 திட்ட இயக்குனர் வனிதா முத்தையா, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், ஆதித்தியா எல்-1 திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி மற்றும் விஞ்ஞானிகள் நாராயணன், ராஜராஜன், எம்.சங்கரன், பாக்கியராஜ் ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா: முதல்வர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார் appeared first on Dinakaran.