×

நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ‘‘எந்தவொரு தனிமனிதரையும் விட இயக்கமும்-இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும் தான் முக்கியம். எனவே, நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கான பணிகளை திமுக தொடங்கியுள்ளது. அந்த வகையில் மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினருக்கு அறிவுரை வழங்கி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தல் எவ்வளவு முக்கியம். வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி செயல்பட வேண்டும். சமூக வலைதள பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்து வருகிறார். இதே போல் திமுகவின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடந்தது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், 234 தொகுதிகளுக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொது முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாகக் காணொலி மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம்மை எதிர்நோக்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் அடைவது போன்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம். அகில இந்தியக் கட்சிகளும் பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகளும்-வலுவான மாநிலக் கட்சிகளும் – இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. பாஜ கட்சி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க முடியாது; இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பணியை கடந்த ஆறு மாதத்துக்கு முன்பே நாம் தொடங்கினோம். நமது வெற்றிக்கு அடித்தளமாக விளங்கக்கூடிய வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்தோம்.

இதுவரையில் அவர்களுக்கான மூன்று பயிற்சி பாசறைக் கூட்டங்கள், தேர்தல் சிறப்பு மாநாடுகளைப் போல நடந்துள்ளன. அடுத்ததாக வடக்கு மண்டல பயிற்சி பாசறைக் கூட்டம் திருவண்ணாமலையிலும், சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி பாசறைக் கூட்டங்களில் நாம் எடுத்துச் சொன்னதைச் செயல்படுத்தினாலே போதும். முழுமையான வெற்றியை நாம் அடைந்து விடலாம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 39 தொகுதிகளை வென்றோம் என்றால், நடக்க இருக்கும் தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். எந்தவொரு தனிமனிதரையும் விட இயக்கமும்-இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும்தான் முக்கியம். மக்கள் நன்றாக இருக்கிறார்கள். அதனை வாக்குகளாக மாற்றுவதற்கு உழையுங்கள். உழைப்பும் செயல்பாடும்தான் வெற்றியைப் பெற்றுத் தரும். திட்டமிட்டு உழையுங்கள். திமுக கூட்டணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற உழையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

* அமைச்சர், மாவட்ட செயலாளருக்கு எச்சரிக்கை
கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியபடி நூறு வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்பதை பல மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர். சில மாவட்ட செயலாளர்கள் இந்த விஷயத்தில் மிக மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகிறீர்கள். இது நல்லதல்ல. நாடாளுமன்ற தேர்தலில் நமது வேட்பாளர் யாராவது தோற்றால் அந்த மாவட்ட செயலாளர் நிச்சயமாக பதவி நீக்கம் செய்யப்படுவார் என எச்சரித்துக் கொள்கிறேன். கட்சி தான் முக்கியம். கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன்.

தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கு, மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் சிலர் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருகிறது. தொகுதி பொறுப்பாளர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் ஒத்துழைப்பையும் அனைவரும் வழங்க வேண்டும். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் வாரம் ஒரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக்கு சென்று , நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாவட்ட செயலாளர், அப்பகுதி நிர்வாகிகள் செய்துள்ள களப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்து எனக்கு அறிக்கையாக தர வேண்டும்’’ என உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : elections ,Chief President ,Dizhagam ,District Secretaries ,G.K. Stalin ,Chennai ,Dizhagam District Secretaries ,Principal ,B.C. ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு