×

தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் இன்று தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கலைஞரின் நூற்றாண்டையொட்டி, தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பாக பனை மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இன்று சென்னை, காமராஜர் சாலை, அவ்வையார் சிலை அருகில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் பனை விதைகளை விதைத்து இத்திட்டத்தினை துவக்கி வைத்தனர். இப்பணியினை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கலைஞரின் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டத்தை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.

திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்த போதுதான் இந்த வாரியம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக குமரி அனந்தன் நியமிக்கப்பட்டு 2011ம் ஆண்டு வரை பணியாற்றினார். தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இவ்வாரியம் கிரீன் நீடா சுற்றுச் சூழலமைப்பு, மாநில நாட்டு நலப் பணித் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுகிறது. மேலும், சென்னை ஐ.ஐ.டி., டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ராணி மேரி கல்லூரி போன்ற பல்வேறு நிறுவனங்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் தன்னார்வலர்களும் இணைந்து ஒரு கோடி பனை மர விதைகளை நடும் திட்டத்தை வெற்றிபெறச் செய்யவுள்ளார்கள் என்பது நெஞ்சுக்கு இதமளிக்கிறது. தமிழ் சமூகத்திற்கு வாழ்நாள் எல்லாம் பல வகையிலும், பல துறையிலும் பயன் அளித்திட்ட கலைஞர் நூற்றாண்டில் முன்னெடுக்கப்படும் இந்த சீறிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். இதற்காக தொழிலாளர் நலன்

மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணனையும் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியின் போது குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் 1,076 கி.மீ. நீள கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் இச்சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கியது. இந்நிகழ்ச்சியில், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, சமூக ஆர்வலர் வழக்கறிஞர் எம்.கண்ணன், ராணி மேரி கல்லுரி, பாரதி மகளிர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் இத்திட்டத்தினை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்துடன் இணைந்து கிரீன் நீடா சுற்றுச் சூழல் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அமைப்பினர், ஒரு லட்ச தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்துகின்றனர். இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 கடற்கரையோர மாவட்டங்களிலும் 430 இடங்களில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் இன்று தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CM G.K. ,Stalin ,Chennai ,Chief President of the ,CM. G.K. Stalin ,CM ,G.K. Stalin ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...