
சென்னை: சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் 3,454 பேருந்துகளை 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் இயக்கி வருகிறது. இதில் 1,559 சாதாரண கட்டணம் பேருந்துகள், 1,674 விரைவு மற்றும் சொகுசு பஸ்கள், 48 குளிர்சாதன பஸ்கள், 207 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன், வாயிலாக தினமும் 28.70 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்கள் காரணமாக சில பஸ்கள் நிறுத்தப்
பட்டது. இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் என 234 பேரை ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 32 பணிமனைகளில் உள்ள 117 டிரைவர்கள், 117 கண்டக்டர்கள் என மொத்தம் 234 காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் அக்.31ம் தேதி மதியம் 2.30 மணிக்குள் டெண்டர் கோருவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அன்று மாலை 3 மணிக்கு டெண்டர் திறக்கப்படும். இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் டெபாசிட் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் டெண்டரில் பங்கு பெறும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.9 கோடி வரை லாபம் ஈட்ட வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் ஓட்டுநர்களுக்கு இஎஸ்ஐ, பி.எப் உள்ளிட்ட சலுகைகளுடன் மாதம் ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். முன்னதாக மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒர்க் ஷாப் டிரைவர்கள் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது டிரைவர், கண்டக்டர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் சேர்க்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
The post ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலம் டிரைவர், கண்டக்டர் தேர்வுக்கு டெண்டர் வெளியீடு: மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.