முத்துப்பேட்டை: திருவாரூர் அருகே திருடிய இடத்தில் விட்டுச்சென்ற ஸ்பேனரை எடுக்க வந்தவர்களை கிராம மக்கள் தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே மேலதொண்டியக்காடு கிராமத்தில் வளவனாற்றில் மின் இறவை நீர் பாசன திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்கான மின் சாதனங்கள் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி இரவு இந்த கட்டிடத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கம்பிகள் மற்றும் மின் சாதன பொருட்களை திருடி சென்றனர். இதற்கு பயன்படுத்திய ஸ்பேனர், குறடு, ஸ்குரூ டிரைவர் உள்ளிட்ட பொருட்களை மறந்து அங்கேயே விட்டு சென்றிருந்தனர்.
மறுநாள் பொருட்கள் திருட்டு போனதை அறிந்த கிராம இளைஞர்கள், விட்டுச் சென்ற பொருட்களை திருடர்கள் எடுக்க வரலாம் என்று இரவில் மறைந்திருந்தனர். நள்ளிரவில் பைக்கில் 2 பேர் வந்து பொருட்களை எடுக்க முயன்றனர். அப்போது மறைந்திருந்த இளைஞர்கள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் இடும்பாவனம் ஊராட்சி அடைஞ்சவிளாகத்தை சேர்ந்த அண்ணன், தம்பி சக்திவேல்(25), விஜய்(20) என்பதும் மற்றவர்கள் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை ஏரிக்கரை ராஜா(53), துர்கா நகர் ரஜினி(45) என தெரிந்தது. 4 பேரையும் போலீசார் ைகது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post திருடுன இடத்தில் விட்டுச்சென்ற ஸ்பேனரை எடுக்க வந்து சிக்கிய ‘புத்திசாலிகள்’: கட்டிவைத்து தர்மஅடி appeared first on Dinakaran.