×

நான் ‘என்றென்றும் அதிமுக காரன்’ தமிழகத்தின் ஏக்நாத் ஷிண்டே ‘நான்’ இல்லை: எஸ்.பி.வேலுமணி சமூகவலைதளம் மூலம் பதில்

சென்னை: தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்டு வந்தாலும், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இது அதிமுக மூத்த தலைவர்களை எரிச்சல் அடைய செய்தது. அண்ணாமலை பற்றி பாஜ மேலிடத்திலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்தார். ஆனாலும் அண்ணாமலை தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், ‘2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்த முடியாது’ என்று அண்ணாமலை பகிரங்கமாக அறிவித்தார். தமிழகத்தில் பாஜவை வளர்ப்பதே எனது குறிக்கோள் என்றார்.

இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் கோபம் அடைந்தார். இதையடுத்து சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி அவசரமாக கூட்டினார். இந்த கூட்டத்திற்கு பிறகு பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக – பாஜ கூட்டணி முறிவு அதிமுக தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதிமுக நிர்வாகிகளில் ஒரு சிலருக்கு இது மகிழ்ச்சியை தந்தாலும், ஒரு சிலருக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பாஜவை ஆதரிக்கும் அணி, பாஜ கூட்டணியை ஏற்காத அணி என 2 அணிகள் இயங்கி வந்தது. சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பாஜவால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போவதாக கூறி வந்தனர். அதேசமயம் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பாஜ கூட்டணியை ஆதரித்து வந்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி நெருக்கடி நிலையில் இருந்து வந்தார்.

இதற்கு உதாரணமாக, மகாராஷ்ராவில் சிவசேனா கட்சியை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியை பாஜ உருவாக்கியதுடன், அவருக்கு முதல்வர் பதவியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே எஸ்.பி.வேலுமணி என சமூக வலைதளங்களில் பாஜ ஐடி விங்க் மறைமுகமாக தகவல் பரப்பி வந்தனர். காரணம், எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பாஜ தலைமை நினைத்தால் அவர் மீது எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வரும் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி நேற்று எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “நான் என்றென்றும் அதிமுக காரன்” என்று அதிமுக சார்பில் நடந்த சைக்கிள் பேரணி படத்தை பதிவிட்டு வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் நான் பாஜவுக்கு ஆதரவாக செயல்பட மாட்டேன், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சொல்லாமல் சொல்லி உள்ளதாக வேலுமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நான் பாஜவுக்கு ஆதரவாக செயல்பட மாட்டேன், தொடர்ந்து எடப்பாடிக்கு விசுவாசமாக இருப்பேன்.

The post நான் ‘என்றென்றும் அதிமுக காரன்’ தமிழகத்தின் ஏக்நாத் ஷிண்டே ‘நான்’ இல்லை: எஸ்.பி.வேலுமணி சமூகவலைதளம் மூலம் பதில் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Karan ,Eknath Shinde ,Tamil Nadu ,SB ,Velumani ,Chennai ,ADMK ,BJP ,Tamil Nadu, ,Annamalai ,
× RELATED பழம் பகைகொண்ட மகரக்கண்ணன்