×

அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: முதல்வர் காணொலி மூலம் உரை

சென்னை: காந்தி ஜெயந்தியன்று தமிழகம் முழுவதும் உள்ள 12,525 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக உரையாற்றுகிறார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அவரதுஅறிக்கையில் கூறியிருப்பதாவது: காந்தியடிகளின் பிறந்த தினமான அக்.2ம் நாளில் நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் கிராம ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராமசபை கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு ஊரக வாழ் பொதுமக்களுக்கு இல்லம் தோறும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வரின் எண்ணப்படி “அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புள்ள மக்கள் நலனை மையமாக கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தினை நோக்கிய இந்த கிராம சபையின் கருப்பொருளாக “எல்லார்க்கும் எல்லாம்” என்கிற மையகருத்தின் படி நடத்தப்படவுள்ளது. அந்தவகையில் அந்த அழைப்பிதழ் கிராமசபை கூட்டத்திற்கான கருப்பொருளான “எல்லார்க்கும் எல்லாம்” எனும் மைய கருத்துடன் அரசு செயல்படுத்தும் அனைத்து முன்மாதிரி திட்டங்கள் மூலம் பயன் பெற்றோர் விவரம், கிராம ஊராட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்கள், ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் அதேபோல, அதனால் பயன்பெறும் பயனாளிகள் ஆகியன அடங்கிய கையடக்க விழிப்புணர்வு பிரதிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் முத்தான திட்டங்களான விடியல் பயணம் – மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை, முதல்வரின் காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், நான் முதல்வன், குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், கிராமசபை கூட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் காணொலி குறும்பட உரையின் மூலம் தொடங்கி வைத்து, கிராமசபை குறித்த கருத்துக்களை தெரிவிக்க உள்ளார்கள். மேலும், அமைச்சர்கள் தொடர்புடைய மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். அதன்படி, கிராமசபை கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதில், பொதுவான விவாத பொருட்களாக, ஊராட்சிகளின் நிதிநிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதமமந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் இதர பொருட்களுடன் விவாதம் நடைபெற உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லார்க்கும் எல்லாம் எனும் மைய கருத்துடன் அரசு செயல்படுத்தும் அனைத்து முன்மாதிரி திட்டங்கள் அடங்கிய கையடக்க விழிப்புணர்வு பிரதிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது.

The post அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: முதல்வர் காணொலி மூலம் உரை appeared first on Dinakaran.

Tags : Grama Sabha ,Tamil Nadu ,22nd Gandhi Jayanthi ,CM ,Chennai ,Gandhi Jayanthi Gram Sabha ,Gandhi ,Jayanthi ,22nd Gandhi Jayanthi Gram Sabha ,
× RELATED கிராம சபை கூட்டங்களில் மீண்டும்...