×

அமராவதி இன்னர் காரிடர் வழக்கு சந்திரபாபுநாயுடு மகனுக்கு சிஐடி போலீசார் நோட்டீஸ்

திருமலை: ஆந்திர மாநிலம் அமராவதி இன்னர் காரிடர் சாலை முறைகேடு தொடர்பாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு மகன் நாரா லோகேஷுக்கு சிஐடி போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கியதில் ரூ.370 கோடி மோசடி நடைபெற்றதாக சிஐ.டி போலீசாரால் சந்திரபாபு கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து சந்திரபாபு மீது பைபர் கிரிட், அமராவதி தலைநகர் அமைத்ததில் முறைகேடு, அமராவதியில் இன்னர் காரிடர் சாலை அமைத்ததில் முறைகேடு உள்ளிட்ட மூன்று வழக்குகள் அடுத்தடுத்து சிஐடி போலீசார் தொடர்ந்துள்ளனர். இதில் பைபர் கிரிட், அமராவதி இன்னர் காரிடர் சாலை முறைகேடு வழக்கில் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் பெயரையும் சிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நாரா லோகேஷை கைது செய்யக்கூடாது. போலீசார் 41 ஏ பிரிவின் கீழ் லோகேஷுக்கு நோட்டீஸ் வழங்கலாம் என ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து டெல்லியில் அசோகா சாலையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. கல்லா ஜெயதேவி வீட்டில் இருந்த நாரா லோகேஷுக்கு சிஐடி போலீசார் நேற்று மாலை நோட்டீஸ் வழங்கினர். இந்த நோட்டீசில் அக்டோபர் 4ம் தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட லோகேஷ் விசாரணைக்கு வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் சந்திரபாபு கைதை கண்டித்து அவரது மனைவி புவனேஸ்வரி அக்டோபர் 2ம் தேதி (நாளை) ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க போவதாக தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் அச்சன் நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post அமராவதி இன்னர் காரிடர் வழக்கு சந்திரபாபுநாயுடு மகனுக்கு சிஐடி போலீசார் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : CID police ,Chandrababu Naidu ,Amaravati Inner Corridor ,Tirumala ,Andhra state ,Chief Minister ,Chandrababu ,Nara Lokesh ,Amaravati ,CIT ,
× RELATED தெலுங்கு தேச கட்சித் தலைவர்...