×

தாமரையை கூட்டணியில் சேர்க்காமல் ஏன் தவிர்த்தோம் என்கிற விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை கட்சியுடனான கூட்டணியை தவிர்த்தால் எப்படி இலைக்கு பாசிட்டிவ்வாக மாறும்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சியுடன் கூட்டணி வேண்டாமுன்னு சேலம்காரர் அதிரடியாக எடுத்த முடிவுக்கு பின்னாடி பல காரணங்கள் இருக்காம். அதுல முதல் காரணம், தன்னை 2026 தேர்தலில் தமிழ்நாடு முதல்வராக ஏத்துக்க முடியாதுன்னு தாமரை தரப்பு சொன்னதுதான் கோபத்தின் உச்சகட்டமாம். என் வயதை நிர்ணயிப்பதற்கு தாமரை தலைவர் யாரு… இன்னும் பல தேர்தல்கள்ல ஜெயிச்சு காட்டும் ெதம்பு என்னிடமும், என் உடலிலும் இருக்கு. இந்த நிலையில என் வயசு, அரசியலை பற்றி பேச தாமரை தலைவர், அக்கட்சியின் உதிரிகளுக்கு என்ன அதிகாரம் இருக்கு… இதற்காகவே தாமரையை கூட்டணியில சேர்க்க கூடாது. என் அரசியல் முடிவை எடுக்க தாமரையில யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லைன்னு தனக்கு வேண்டிய மாஜி அமைச்சர்களிடம் கொந்தளித்தாராம். ஆனால், அறிக்கை, கட்சியினர், பொதுக்கூட்டங்களில் பங்கேற்பவர்கள், தாமரையுடன் கூட்டணி வைத்தால் தேர்தல் சமயத்தில் இலைக்கு வரக் கூடிய சிறுபான்மையினரின் 70 லட்சம் ஓட்டு வேறு கட்சிக்கு மாறும். தாமரை கூட்டணியால் எங்களுக்கு பிளஸ் இல்லை… மைனஸ் பாயிண்ட்ஸ் தான் அதிகம். அதாவது, சிறுபான்மையினர் அதிகம் உள்ள இடத்தில் இலை கூட்டணிக்கு அதிக ஓட்டுகள் கிடைக்காது. இதை தவிர்க்க இந்த கனத்த முடிவாம் என்கிறது சேலம் வட்டாராம். முன்பெல்லாம் சேலத்துக்காரரை நண்பரை போல பார்த்தோம், பல்வேறு கோரிக்கைகளை எளிமையாக எடுத்து வச்சோம். ஆனா தூங்கா நகரத்து மாநாட்டிற்கு பிறகு அவரை பார்த்தாலே பயமா இருக்கு. அவரது முகத்தை நேரடியாக பார்த்து பேச முடியல. அவரிடம் கட்சியின் நிலை குறித்தும் பேச முடியலன்னு இலைக்கட்சி எம்எல்ஏக்களே புலம்புறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டிரான்ஸ்பர் கொடுத்தும் எதற்காக அதிகாரிகள் போக மறுக்கிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இரண்டு உதவி கமிஷனர்கள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இருவருமே ஐந்து எழுத்து பெயர் கொண்டவர்கள். ஒருவர் சேலத்துக்கும், இன்னொருவர் திருச்சிக்கும் இடமாற்றம் செய்தாங்களாம். ஆனால், இருவருமே அங்கு சென்று, பணியில் சேரவில்லை. மாறாக, கோவையிலேயே இருக்காங்க. செல்வாக்குள்ள நபர்களை பிடித்து டிரான்ஸ்பரை தடுக்க நினைச்சாங்களாம். ஆனால், மாநகராட்சி கமிஷனரே, அந்த இரண்டு பேரும் தேவையில்லை என்ற முடிவில் தீர்க்கமாக இருக்கிறாராம். இருவரையும் கடந்த 27ம்தேதியுடன் பணியில் இருந்து விடுவித்து விட்டாராம். அத்துடன், அந்த இரு பணியிடங்களுக்கும் வேறு நபர்களை பணியமர்த்தி, அதற்கான உத்தரவும் போட்டாச்சாம். அதனால், ஐந்து எழுத்து பெயர் கொண்ட இரு உதவி கமிஷனர்களும், இனி சேலம், திருச்சிக்கு போயே ஆக வேண்டுமாம். எதற்காக இவர்கள் இருவரும் நகர மறுக்கிறார்கள் என்பதுதான் கோவை மாநகராட்சி அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கேள்வியாக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ லோக்கல் பாலிடிக்சில் சிக்கி தவிக்கும் ‘ஷாக்’ சங்க நிர்வாகி குறித்து சொல்லேன்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் ‘ஷாக்’ துறை அதிகாரிகள் சிலருக்கும், ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்துக்கும் இடையே இருக்கும் பிரச்னை பூதாகரமாக மாறி உள்ளதாம். தொழிற்சங்க நிர்வாகியாக இருக்கும் வெற்றியானவருக்கு எதிராக கீதையின் நாயகன் பெயரைக் கொண்ட அதிகாரி ஒருவரின் தூண்டுதலின்பேரில் பேனர் வைத்ததாக காக்கிகளிடம் புகார் கொடுத்து இருக்காங்களாம். பேனரை அகற்றக் கோரி புகார் கொடுக்கப்பட்டு இருப்பதால் பேனரை எடுக்கவா அல்லது வழக்கு பதிவு செய்யவா… என்று குமரி காக்கிகள் திணறி வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பவர்புல் பெண்மணிக்கு புதுச்சேரியில என்ன ஆச்சு, இப்போ அதிர்ச்சியில இருக்கிறதா சொல்றாங்களே, உண்மையா…’’ என்று கேட்டார் விக்கியானந்தா.
‘‘புதுவையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பாடுபட்டதாக பவர்புல் பெண்மணியும், புல்லட் சாமியும் மார்தட்டி கொண்டு, பொதுமேடையில் பேசி வந்தாங்க. அதற்கு ஒருபடி மேல் சென்று மருத்துவ படிப்பில் சேர்ந்த 20 அரசு பள்ளி மாணவர்களுக்கு பவர்புல் பெண்மணி, பாராட்டு விழா எடுத்து மருத்துவ உபகரணங்கள் கொடுத்தாங்களாம். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களும் கலந்து கொண்டு பேச வேண்டும். உள்ஒதுக்கீடு கிடைக்க பாடுபட்ட பவர்புல் பெண்மணியை பெற்றோர்கள் புகழ்ந்து பேச வேண்டும் என அவரது அலுவலக அதிகாரிகள் கூறி அதற்காக சில குறிப்புகளையும் பெற்றோரிடம் வழங்கி இருந்தாங்க. ஆனால் அங்கு நடந்ததே வேறு கதையாம். பெற்றோர் பேசும்போது, உள்ஒதுக்கீடு கொண்டு வந்ததால் எங்களது பிள்ளைகளுக்கு மருத்துவ சீட் கிடைத்தது. ஆனால் அங்கு சேருவதற்கு பணம், அதற்கான செலவுகளும் செய்ய எங்களிடம் பணம் இல்லை. தனியார் கல்லூரியில் சேரும்போது மூன்று லகரத்தில் இருந்து 5 லகரம் வரை கேட்கிறாங்க. நிலம், வீட்டை விற்றால் தான் மருத்துவ படிப்பை முடிக்க முடியும் நிலை உள்ளது. மாணவர்களை சேர்த்து பணத்துக்கு என்ன செய்வதுன்னு தெரியாமல் முழிக்கிறோம். எங்களுக்கு ஏதாவது பண உதவி செய்யுங்கள் என பலரும் ஒருமித்த குரலாக அவர்களது பேச்சு ரிவர்சில் திரும்பியதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த பவர்புல் பெண்மணி, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிவிட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டால் போதும் என்று அங்கிருந்து எஸ்கேப் ஆகிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தஞ்சையில் நெல்மணி சிதறி கிடக்கும்… கட்சிகள் அதுக்கு மேலே சிதறி இருக்காமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சிய மாவட்டத்துல நீண்ட நாட்களாக இலை கட்சிக்கு மாவட்ட செயலாளர்கள் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. தாமரை கட்சியுடன் கூட்டணி முறிவை தொடர்ந்து, இலை கட்சியில பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நியமிச்சாங்க. அதுல ஒன்னா நெற்களஞ்சியம் மாவட்டத்துக்கும் மாவட்ட செயலாளர் நியமிச்சு இருக்காங்க. இது இலை கட்சிக்காரங்ககிட்ட சலசலப்பை ஏற்படுத்தியிருக்குதாம். மாற்று கட்சியில இருந்து வந்தவருக்கு எப்படி மாவட்ட செயலாளர் பதவி தரலாம்ன்னு கட்சியில முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருக்காங்களாம். பல ஆண்டுகளாக நாங்க கட்சிக்கு உழைச்சிருக்கோம், எங்களுக்கு பதவி தராம எப்படி அவருக்கு பதவி கொடுக்கலாம்னு பேசினாங்களாம். தற்போது இந்த டாப்பிக் தான் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் சூடான விவாதத்தை ஏற்படுத்தி இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரையை கூட்டணியில் சேர்க்காமல் ஏன் தவிர்த்தோம் என்கிற விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Tamarai ,wiki ,Yananda ,Lotus Party ,Uncle ,Peter ,Lotus ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...