×

பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் இடத்தை மாற்றவேண்டாம்: வீரேந்திர சேவாக் பேட்டி

புதுடெல்லி: 13வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் இந்தியாவில் வரும் 5ம்தேதி தொடங்கி நவம்பர் 19ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் வரும் 8ம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் ஆடும் லெவனில் மிடில் ஆர்டரில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர், இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகிய 3 பேரில் ஒருவருக்கு தான் இடம் கிடைக்கும். 3 பேரும் அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடினர். இதில் 2வது போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் விளாசினார். சூர்யகுமார் 37 பந்தில் 72 ரன் அடித்தார். இந்நிலையில் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 4வது இடத்திற்கு ஸ்ரேயாஸ் தகுதியானவர் என தெரிவித்துள்ளார்.

6வது வரிசையில் பேட் செய்யும் ஒருவரை (சூர்யகுமார்), மிக முக்கியமான நிலையான 4வது இடத்திற்கு ஏன் மாற்ற விரும்புகிறீர்கள். புதிய பந்தில் தொடக்க விக்கெட்டுகளை விரைவாக இழந்தால் இன்னிங்ஸை ஸ்திரப்படுத்தக்கூடியவர் ஸ்ரேயாஸ். அதனால் அவரது இடத்தை மாற்றவேண்டாம். சூர்யகுமார் ஒருநாள் போட்டிகளில் டாப் ஆர்டரில் சிறந்த இன்னிங்ஸ் ஆடியதில்லை. அவர் அடித்தது பெரும்பாலும் கடைசி 15 ஓவர்களில் தான். அது டி.20 ஆட்டம் போன்றது. சூர்யாவின் வேலையை கே.எல்.ராகுல், ஹர்திக்பாண்டியா, இஷான்கிஷனால் செய்ய முடியும். எனவே, என் பார்வையில், ஸ்ரேயாஸ் 4வது இடத்திற்கு மிகவும் பொருத்தமானவர். சூர்யகுமார் காத்திருக்க வேண்டும். அவர் சதம் அடிக்கும் திறன் கொண்டவர் என்பதை தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் நிரூபிக்க வேண்டும் என்றார்.

அக்சருக்கு பதில் வாஷிங்டனை சேர்த்திருக்க வேண்டும்
முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அளித்த பேட்டி: இந்த தலைமுறையின் சிறந்த வீரராக வருவதற்கு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு உள்ளது. அவர் கடினமாக உழைக்கிறார். சிறு வயதில் இருந்தே நான்கு மடங்கு கடினமாக உழைக்கிறார். அவர் இந்த சகாப்தத்தின் வீரராக இருக்க முடியும். அவர் இப்போது அச்சமற்ற நிலையில் இருக்கிறார். உலகக் கோப்பையில் அவர் இந்தியாவை மாற்றியமைக்க முடியும். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடி பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார். அக்சர் இல்லாததால், 7வது இடத்தில் யார் பேட்டிங் செய்வார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடியிருந்தால், இந்தியாவுக்கு இன்னொரு இடது கை வீரர் கிடைத்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் தேர்வு செய்யப்படவில்லை, என்றார்.

The post பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் இடத்தை மாற்றவேண்டாம்: வீரேந்திர சேவாக் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Shreyas ,Virender Sehwag ,New Delhi ,ICC Cricket World Cup ,India ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...