
சென்னை: விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை தணிக்கை செய்ய மும்பையை சேர்ந்த தணிக்கை வாரிய அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை தணிக்கை செய்ய மும்பையை சேர்ந்த தணிக்கை வாரிய அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தணிக்கை வாரியம் அளித்துள்ள விளக்கத்தில் திரைப்பட தணிக்கையில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கவே இ-சினிபிரமான் என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஆனால், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் இடைத்தரகர்களை அணுகுவதாகவும் அவ்வாறு தணிக்கை வாரியத்தின் பெயரில் யாரவது பணம் கேட்டால் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விஷாலின் புகார் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “மும்பையில் ஊழல் விவகாரம் தொடர்பான இந்த முக்கியமான விஷயத்தில் உடனடி நடவடிக்கைகளை எடுத்ததற்காக, எடுக்கப்பட்ட தேவையான நடவடிக்கைக்கு மிக்க நன்றி மற்றும் ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும், ஊழலின் படிகள் அல்ல, தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்த முயற்சியை உடனடியாக வெளிக்கொணர்வதில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வைத் தருகிறது.
The post மும்பை தணிக்கை வாரியம் மீதான புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்த ஒன்றிய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி appeared first on Dinakaran.