×

இந்தியாவில் ஆண்டுக்கு ரேபிஸ் நோயால் 15,000க்கும் அதிகமானோர் இறப்பு

காரைக்குடி, செப். 30: காரைக்குடி அருகே சங்கராபுரத்தில் உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் காரைக்குடி நகராட்சி சார்பில் இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது. டாக்டர் கோகிலவாணி வரவேற்றார். சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி, உதவி இயக்குநர் டாக்டர் பாலசுப்பிரமணியன், காரைக்குடி நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா முன்னிலை வகித்தனர். முகாமை துவக்கி வைத்து எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற வேண்டும் என்ற சீரிய கொள்கையில் செயல்பட்டு வருகிறார். விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு உள்ளது.கால்நடை வளர்ப்பு மூலம் கூடுதல் வருவாய் பெற அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வகையான கால்நடைகள் 19 லட்சத்து 86 ஆயிரத்து 561 உள்ளன. இவற்றை பேணி பாதுகாப்பதில் கால்நடை மருத்துவர்களின் பங்கு அதிகம். ரேபிஸ் நோய் பாதிப்பால் இந்தியாவில் ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது’ என்றார். இதில் டாக்டர்கள் லட்சுமணன், சுரேஷ், நதியா, கால்நடை ஆய்வாளர்கள் ஆனந்தி, ராஜம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முருகேசன், கண்ணாத்தாள், தேன்மொழி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் 115க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

The post இந்தியாவில் ஆண்டுக்கு ரேபிஸ் நோயால் 15,000க்கும் அதிகமானோர் இறப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Karaikudi ,Sankarapuram ,World Rabies Prevention Day ,Animal Husbandry Department ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...