×

மிகப்பெரிய பாடம்

சந்தனமர கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் மலைப்பகுதி கிராமம் வாச்சாத்தி. இக்கிராம‌‌த்தை சேர்ந்தவர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க சென்ற தமிழ்நாடு வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பல மணி நேர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியில் வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைது செய்தனர். அவர்களில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள்.

இந்த விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்கள் வாச்சாத்தியை சேர்ந்த 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த கொடுஞ்செயல், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை அன்றைய அதிமுக அரசு, ஆரம்பத்தில் மறுத்தது. பின்னர், 1992-ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி முறையான புகார் பதிவு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணையை தமிழ்நாடு காவல்துறை முறையாக நடத்தவில்லை என்ற புகாரை தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில் 4 அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய்துறையினர் என 269 பேர் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போதே 54 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி தீர்ப்பளித்தது. இவர்களில் 126 பேர் தமிழ்நாடு அரசின் வனத்துறை அலுவலர்கள், 84 பேர் தமிழ்நாடு காவல்துறையினர், மீதமுள்ள 5 பேர் தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள். இவர்களுக்கு 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது.

யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை தற்போது உறுதியாக்கி இருக்கிறது உயர்நீதிமன்றம். 269 குற்றவாளிகள், 159 சாட்சிகள், ஆவணங்கள், விசாரணை, நீதிமன்றங்களில் மேல்முறையீடு, உண்மையறியும் குழுக்களின் அறிக்கை என 31 ஆண்டாக இந்த வழக்கு நடைபெற்று வந்தாலும், ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் நீதிதான் அதேபோன்ற மற்றொரு குற்றம் நடக்காமல் இருப்பதற்கான பாடம். அந்த மிகப்பெரிய பாடம் தற்போது கிடைத்துள்ளது. அப்போதைய அதிமுக அரசு செய்யத்தவறியது இப்போது நடந்திருக்கிறது. அதை நீதிபதியே தனது தீர்ப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார். ‘‘பழங்குடியின பெண்களை பாதுகாக்க அப்போதைய அதிமுக அரசு தவறிவிட்டது.

தவறு செய்துள்ள அதிகாரிகளை அதிமுக அரசு காப்பாற்றியுள்ளது. உண்மையான கடத்தல்காரர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வனத்துறை அதிகாரிகள் எந்தவொரு பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையான கடத்தல்காரர்களுடன் சேர்ந்து கிராம வாசிகளை அதிகாரிகள் கூலியாக பயன்படுத்தியதை இது தெளிவாக காட்டுகிறது. தங்களது தவறை மறைக்க கிராம மக்களுக்கு எதிராக சந்தன மர கடத்தல் வழக்குகளை அதிகாரிகள் பதிவு செய்ததும் தெளிவாகியுள்ளது. சந்தன மர கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசின் உதவியோடு வனம், காவல், வருவாய்த்துறை வெறியாட்டம் ஆடியுள்ளது’’ என்று அவர் தனது தீர்ப்பில் சாட்டையடி கொடுத்துள்ளார். இந்த தீர்ப்பை வாச்சாத்தி மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

The post மிகப்பெரிய பாடம் appeared first on Dinakaran.

Tags : Vachathi ,Dharmapuri district ,Veerappan ,
× RELATED வரத்து அதிகரிப்பால் குண்டுமல்லி விலை சரிவு