×

பாரம்பரிய ரகங்களை பாதுகாக்க அரசு மானியத்தில் விதை நெல் விநியோகம் அதிகபட்சமாக 20 கிலோ வழங்கப்படுகிறது தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட

திருவண்ணாமலை, செப்.30: பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்காக, ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 20 கிலோ விதை நெல் மானிய விலையில் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கிறது. இங்கு, நெல் பிரதான சாகுபடி பயிராகும். குறிப்பாக, பாரம்பரிய பொன்னி உள்ளிட்ட நீண்டகால நெல் ரகங்கள் மற்றும் சன்னரக நெல் ரகங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், வழக்கத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வரும் நாட்டு ரகங்கள் எனப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், வேளாண்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

அதன்படி, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், அதன் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய விலையில் விதை நெல் வழக்கப்படுகிறது. நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், பாரம்பரிய நெல் ரக விதைகள், வேளாண்மைத்துறை மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நெல் பாரம்பரிய ரகங்களான தூயமல்லி, சீரகசம்பா, மாப்பிள்ளைசம்பா, கருப்புகவுணி, செங்கல்பட்டு சிறுகமணி, சொர்ணாமசூரி, கருங்குறுவை ஆகிய ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த ரகங்களின் விற்பனை விலை ஒரு கிலோ ₹50 ஆகும். ஆனாலும், விவசாயிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் ஒரு கிலோ ₹25 வீதம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரைஅரசு மானியத்தில் விதை நெல் வழங்கப்படுகிறது. எனவே, சம்பா பருவ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களில் பாரம்பரிய நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம்.

The post பாரம்பரிய ரகங்களை பாதுகாக்க அரசு மானியத்தில் விதை நெல் விநியோகம் அதிகபட்சமாக 20 கிலோ வழங்கப்படுகிறது தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,
× RELATED மூடிக் கிடந்த வீட்டுக்குள் இறந்து...