×

பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன வழக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் குழு அறிக்கை: ஐகோர்ட்டில் தாக்கல்

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்களின் நியமனம் தொடர்பாக விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் குழு, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான 6 கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனம் செல்லாது என்று அறிவித்து 2022 நவம்பர் 17ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 254 உதவி பேராசியர்களின் பணி நியமனத்தை ஒட்டுமொத்தமாக செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து 2022 நவம்பர் 22ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் இரு நபர் குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.

நீதிபதி கோகுல்தாசுக்கு உதவியாக, சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ப்ரீதா ஞானராணியை நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த பின் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன வழக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் குழு அறிக்கை: ஐகோர்ட்டில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Pachaiyappan College ,Gokuldas ,Chennai ,Pachaiyappan Trust Colleges ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...