×

நாடாளுமன்றம், சட்டசபைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு சட்டமானது மகளிர் மசோதா: ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி

புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா 1996ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 2010ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேறினாலும், மக்களவையில் நிறைவேறவில்லை. இந்தநிலையில் செப்.18ம் தேதி தொடங்கிய சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவில் 2026ம் ஆண்டுக்கு பின் வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையரை செய்து அதன் பின்னர் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும். இந்த இடஒதுக்கீடு அடுத்த 15 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இந்த மசோதா இரண்டு அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேறியது. மக்களவையில் மட்டும் 2 பேர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்து இருந்தனர். இதையடுத்து மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு நேற்றுமுன்தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

இதை தொடர்ந்து மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறியது. இதுதொடர்பாக சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,’ மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து இந்த மசோதா இனிமேல் அதிகாரப்பூர்வமாக அரசியலமைப்பு 106வது திருத்த சட்டம் என்று அறியப்படும். அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பு வெளியாகும் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும்’ என்று கூறப்பட்டுள்ளது. இனிமேல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும். அதைத் தொடர்ந்து நடைபெறும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும். பின்னர் பெண்களுக்கு ஒதுக்கப்படும் ெதாகுதிகள் முடிவு செய்யப்படும். அதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.

The post நாடாளுமன்றம், சட்டசபைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு சட்டமானது மகளிர் மசோதா: ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி appeared first on Dinakaran.

Tags : Parliament ,President ,New Delhi ,Drarubathi Murmu ,Assemblies ,
× RELATED காங்கிரஸ் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம்