×

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மத வயதை 16ஆக குறைக்கக்கூடாது: ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு

புதுடெல்லி: போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயது 18 ஆக உள்ளது. இதற்கும் குறைவான வயது உள்ள சிறுமிகளிடம் விருப்பத்துடன் அத்துமீறினாலும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பல்வேறு நாடுகளில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயது குறைக்கப்பட்டு வருகிறது. எனவே இந்தியாவிலும் சம்மதத்துடன் பாலியல் உறவுக்கு அனுமதி அளிக்கும் வயதை குறைக்க பல்வேறு தரப்பிலும் இருந்தும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதுபற்றி ஒன்றிய அரசு சட்ட ஆணையத்திடம் விளக்கம் கேட்டது. இந்தநிலையில் ஒன்றிய அரசிடம் தற்போது இதுதொடர்பான அறிக்கையை சட்ட ஆணையம் வழங்கி உள்ளது. அதில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16ஆக குறைப்பது நல்லதல்ல என்று கருத்து தெரிவித்து உள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான குழு வழங்கிய அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: போக்சோ சட்டத்தின் கீழ் தற்போதுள்ள சம்மதத்தின் வயதை குறைக்க வேண்டாம். ஏனெனில் பாலியல் சம்மத வயதை 18ல் இருந்து 16ஆக குறைத்தால் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மேலும் இளமைப் பருவ காதலை கட்டுப்படுத்த முடியாது. மேலும் குழந்தை கடத்தல், குழந்தைகளிடம் அத்துமீறல், குழந்தை விபசாரம் உள்ளிட்ட பிரச்னைகளில் வயது குறைத்தல் விருப்பத்தகாத நடவடிக்கை ஆகிவிடும். மாயம் தொடர்பான வழக்குகளில் குற்ற நோக்கத்தில் ஈடுபடுவது போன்ற வழக்குகளில் கூட நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இருப்பினும் நீதித்துறை பரிந்துரைப்படி மறைமுக ஒப்புதல் விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இவ்வாறு சட்ட ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

* 2029ம் ஆண்டு முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல்: சட்டசபைகளில் பதவிக்காலத்தை கூட்டவும், குறைக்கவும் முடிவு
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவினர் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகள், எம்பிக்கள் கொண்ட கட்சிகள், அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சிகளை அழைத்து ஆலோசனை பெறுவது என்றும், சட்ட ஆணையத்தின் பரிந்துரையை பெறுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் சட்ட ஆணையம் தனது பரிந்துரைகளை இறுதி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் விவரம்:
* 2029ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் அனைத்து மாநிலத் தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்களையும் நடத்தும் வகையில், மாநில அரசுகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பது அல்லது குறைப்பது மூலம் அனைத்து சட்டமன்றத் தேர்தல்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் சட்ட ஆணையம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
* அதற்கு வசதியாக மக்களவை, சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுவான வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான வழிமுறையை சட்ட ஆணையம் ஆராய்ந்து வருகிறது.
* சில பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்காததால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த சட்ட ஆணையத்தின் அறிக்கை முழுமையாக தயாராகவில்லை.
* ஆனால் 2029 முதல் மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்கள் இரண்டும் ஒன்றாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு சட்டசபை தேர்தல்களை ஒருங்கிணைக்க நீதிபதி ரிது ராஜ் அவஸ்தியின் கீழ் உள்ள கமிஷன், சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை குறைக்க அல்லது அதிகரிக்க வேண்டிய பரிந்துரைகளை மேற்கொள்ளும்.
* ஒரே நாடு, ஒரே தேர்தலில் முதல்கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தலும், 2வது கட்டமாக உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தல் நாட்டின் நிலவும் பல்வேறு காலநிலை நிலைகளை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும்.

The post போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மத வயதை 16ஆக குறைக்கக்கூடாது: ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Commission ,Union Govt ,New Delhi ,Law Commission ,Union Government ,Dinakaran ,
× RELATED இயற்கை எரிவாயுவுடன் அழுத்தப்பட்ட உயிர்வாயு கலப்பு கட்டாயம்: ஒன்றிய அரசு