×
Saravana Stores

இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு பெட்ரோல் விலை உயர்வால் மொபட் இ-பைக்காக மாற்றம்: ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ பயணிக்கலாம்

பாடாலூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஐடிஐ படித்த இளைஞர் ரூ.20 ஆயிரம் செலவில் மொபட்டை இ- பைக்காக மாற்றி அசத்தியிருக்கிறார். ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ பயணிக்கலாம். ஒன்றிய பாஜ ஆட்சியில் பெட்ரோல், டீசல் உயர்ந்து வருகிறது. இதனால் மாற்று வாகனங்களை தேடும் நிலை உருவாகியது. அந்த வகையில், இ- பைக்குகளுக்கு வரவேற்பு இருக்கிறது. இதன்விலை அதிகமாக இருப்பதால் அனைவராலும் இதை வாங்க முடியாத நிலை இருந்து வருகிறது.

அந்த வகையில், மாற்று வாகனத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்த ஐடிஐ படித்த இளைஞர் ஒருவர் மொபட்டை இ- பைக்காக மாற்றி அசத்தியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (33). ஐடிஐ படித்துள்ள இவர், வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக, அதற்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் இ-பைக் வடிவமைக்க திட்டமிட்டார். இதையடுத்து அவர், பழைய டி.வி.எஸ் மொபட்டில் மின் மோட்டார், பேட்டரி, கண்ட்ரோலர், பிரேக் கட் ஆபர் என பல உதிரி பாகங்களை ரூ.20 ஆயிரம் செலவு செய்து மொபட்டை இ-பைக்காக மாற்றியிருக்கிறார்.

இது குறித்து மணிகண்டன் கூறுகையில், ‘வடிவமைத்துள்ள இந்த மொபட்டில் உள்ள பேட்டரியில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 கி.மீ. வேகத்தில் 200 கிலோ எடை கொண்ட பொருட்களுடன் 50 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். ஒரு முறை சார்ஜ் போட ஒரு யூனிட் மின்சாரமே செலவாகும். இதில் 12 வோல்ட் கொண்ட 4 பேட்டரிகள் பொருத்தியுள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற கூடுதல் திறன்மிக்க மின்சாரத்தில் இயங்கும் மொபட்டை உருவாக்க முடியும்’ என்றார்.

The post இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு பெட்ரோல் விலை உயர்வால் மொபட் இ-பைக்காக மாற்றம்: ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ பயணிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Badalur ,
× RELATED ஆலத்தூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகள்